திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 நவம்பர் 2020 (10:11 IST)

பணத்தை கொடு பிணத்தை எடு... அதிமுக அப்ரோச்சை படம் போட்டு காட்டிய உதயநிதி!

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் தரப்பட்ட ஊழல் பணத்தை வசூலிக்க அதிமுக செய்த செயலை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 
 
சமீபத்தில் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவுக்கு பலியான செய்தி அதிமுகவை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியது. ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒருசில விஐபிகள் பலியாகிய நிலையில் அமைச்சர் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் தரப்பட்ட ஊழல் பணத்தை வசூலிக்க அதிமுக செய்த செயலை கடுமையாக விமர்சித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 
 
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் தரப்பட்ட ஊழல் பணத்தை வசூலிக்க, ’பணத்தைக்கொடு-உடலை எடு’ என அவரின் குடும்பத்தை நெருக்கியதாக செய்திகள் வருகின்றன. துரைக்கண்ணுவிடமே 800 கோடி என்றால் ஒட்டுமொத்த அடிமைகளிடமும் எவ்வளவு இருக்கும்? அசாதாரணங்கள் அடிமைகள் ஆட்சியில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
 
அடிமைகளை மேலும் அடிமைகளாக்க தமிழகத்தை ஓவர்டைம் எடுத்து கவனிக்கும் இன்கம்டாக்ஸ், சிபிஐ போன்றவை இவ்விஷயத்தில் மயான அமைதி காக்கின்றன. ஆர்.கே நகர் தேர்தல் பணப்பட்டுவாடா பட்டியலில் முதல்வர் உட்பட அமைச்சர்களின் பெயர் ஆதாரங்களுடன் கிடைத்தும் அவ்வழக்கு என்னானது என இதுவரை தெரியவில்லை.
 
மக்கள் - சட்டம் - ஜனநாயகம் - ஊடகம்... இப்படி எதன்மீதும் அடிமைகளுக்கு மரியாதையோ, பயமோ இல்லை என்பதற்கு துரைக்கண்ணு விவகாரம் மேலும் ஒரு சான்று. கொள்ளை பணத்தின் ஒரு பகுதியை தமிழகம் முழுவதும் பிரித்தளித்து வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என அடிமைகள் நினைக்கின்றனர். ஆனால் அது இம்முறை நடக்காது என குறிப்பிட்டுள்ளார்.