தடையை மீறி துள்ளி வருவோம்; துள்ளி வந்தா சட்டம் பாயும்!? பாஜக – அதிமுக இடையே சர்ச்சை!?
தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறி யாத்திரை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த பாஜக அனுமதி கோரிய நிலையில் கொரோனா பரவல் காரணமாக யாத்திரைக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாஜக தமிழக துணை தலைவர் “தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்துவதில் உறுதியாக உள்ளோம். இதுகுறித்து மத்திய பாஜக தலைமையில் ஆலோசித்து மேல்மட்ட தலைவர்கள் ஆலோசனைப்படி செயல்படுவோம். அனைத்து தடைகளையும் மீறி துள்ளி வரும் வேல்” என கூறியுள்ளார்.
இந்நிலையில் பாஜக வேல் யாத்திரை குறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “கொரோனா பரவலை தடுக்கவே அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கவில்லை. அனைவரும் அரசின் உத்தரவை பின்பற்றி நடக்க வேண்டும். தடையை மீறி யாத்திரை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என எச்சரித்துள்ளார்.
கூட்டணியில் உள்ள பாஜக – அதிமுக இடையே வேல் யாத்திரை தொடர்பாக எழுந்துள்ள இந்த வாக்குவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.