1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (12:24 IST)

வங்கிக்கடன் தவணை கேட்டு மிரட்டிய ஊழியர்: மதுரை வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி..!

வங்கிக்கடன் தவணை கேட்டு அதிகாரிகள் மிரட்டிய நிலையில் மதுரை வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில், தனியார் வங்கியில் வாங்கிய கடனுக்கான தவணையை கேட்டு வங்கி ஊழியர் மிரட்டியதால், ஊறுகாய் வியாபாரி குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள ஊராண்ட உரப்பனூர் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி மற்றும் ஜீவஜோதி தம்பதியினர் கடந்த 2 ஆண்டுகளாக ஊறுகாய் தொழிலை நடத்தி வந்தனர். இந்நிலையில், தனியார் வங்கியில் இருந்து ரூ.2.5 லட்சம் கடன் பெற்றிருந்த நிலையில், கடனுக்கான இரண்டு மாத தவணையை செலுத்த முடியாமல் இருந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, நேற்று வங்கியின் வசூல் பணியாளர் ஒருவர் நேரடியாக வீட்டிற்கு வந்து உடனடியாக தவணை தொகையை கட்டுமாறு மிரட்டியுள்ளார்.

இதனால்  பெரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பால் பாண்டி - ஜீவஜோதி  தம்பதியினர் தங்களின் 14 வயது மகன் மற்றும் 12 வயது மகளுடன் விஷமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். தற்போது குடும்பத்தினர் அனைவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Mahendran