வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 30 மே 2024 (12:43 IST)

ஆளில்லா கிராமம் ஆனது தூத்துகுடி மாவட்ட மீனாட்சிபுரம்.. ஒரே நபரும் உயிரிழப்பு..!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் ஒரே ஒரு நபர் மட்டுமே வசித்து வந்த நிலையில் அந்த நபரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததால் ஆளில்லா கிராமம் என்ற பெயரை அந்த கிராமம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் 1269 பேர் வசித்து வந்த நிலையில் பின்னர் ஒவ்வொருவராக அந்த ஊரை காலி செய்து விட்டு வெளியூருக்கு சென்றனர். எனினும் 75 வயது கந்தசாமி என்பவர் மட்டும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மீனாட்சிபுரம் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்.

தண்ணீர் தட்டுப்பாடு, வேலை வாய்ப்பின்மை போன்ற காரணங்களால் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அந்த ஊரை விட்டு சென்றாலும் கந்தசாமி மட்டும் கடைசி வரை நான் இங்கே தான் இருப்பேன் என்று பிடிவாதம் ஆக அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கந்தசாமி மறைந்ததை அடுத்து அவருக்கு இறுதி சடங்கை அவரது உறவினர்கள் செய்து வைத்தனர். இந்த நிலையில் மீனாட்சிபுரம் கிராமத்தில் வசித்த ஒரே ஒரு நபரும் உயிரிழந்து விட்டதால் அந்த கிராமம் தற்போது ஆளில்லா கிராமமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva