செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 3 ஜூலை 2023 (15:28 IST)

விறகு வெட்டும் கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து நொறுக்கிய நபர்!

atm machine broken
வேலூர் மாவட்டத்தில் விறகு வெட்டும் கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து நொறுங்கிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம், ஊசூர்- அணைக்கட்டு மெயின்ரோடு பேருந்து நிறுத்ததில் தனியார் வங்கி ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்திற்கு நாள்தோறும் பலரும் வந்து பணம் எடுத்துச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், இன்று காலையில் ஊசூர் காலனி பகுதியில் வசித்து வரும் கந்தசாமி ( 53) என்ற கூலித் தொழிலாளி ஏடிஎம்-ல் பணம் எடுக்கச் சென்றார்.

தொடர்ந்து பலமுறை முயற்சி செய்தும் ஏடிஎம் இயந்திரத்தில் கார்டு சொருகிப் பணம் எடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனல் ஆத்திரம் அடைந்த கந்தசாமி தன் வீட்டிற்குச் சென்று விறகு வெட்டும் கோடாரியை எடுத்து வந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தார்.

ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் சத்தம் கேட்டு அருகில் இருப்போர் வந்து பார்த்து, கந்தசாமியை தடுத்துள்ளனர். அவர்களின் பேச்சைக் கேட்காமல், மேலும் ஏடிஎம் மெஷினை அடித்து நொறுக்கியுள்ளார். பின்னர், அவரைப் பிடித்து வைத்துக் கொண்டு போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார்  அடித்து  நொறுக்கப்பட்ட ஏடிஎம் மெஷினை பார்வையிட்டு, கந்தசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், கந்தசாமி மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது