1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (18:29 IST)

பாரத மொழிகளில் செயற்கை நுண்ணறிவு - ஓலா நிறுவனர் ஆலோசனை!

பாரத மொழிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் ஓலா நிறுவனர் ஆலோசனை.


"சாமானிய மக்களும் தங்களுடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பாரத மொழிகளில் உருவாக்க வேண்டும்" என ஓலா நிறுவனர் திரு. பவிஷ் அகர்வால் கூறினார்.

சத்குரு அகாடமி சார்பில் ‘இன்சைட்’ என்ற வர்த்தக மேம்பாட்டு நிகழ்ச்சி கோவை ஈஷா யோக மையத்தில் நவ 23-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது. இதில் 18 நாடுகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தொழில்முனைவோர்கள் சந்திக்கும் பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து இந்தியாவின் முன்னணி வர்த்தக தலைவர்கள் பலர் சிறப்புரை ஆற்றினர்.

அதன் ஒரு பகுதியாக, ஓலா நிறுவனத்தின் நிறுவனர் திரு. பவிஷ் அகர்வால் அவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மின்சார வாகன வர்த்தகம் குறித்து சத்குருவுடன் கலந்துரையாடும் நிகழ்வும் நடைபெற்றது. அப்போது பவிஷ் அகர்வால் கூறுகையில், ‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உருவாக்கும் துறையில் தொழில்முனைவோர்களுக்கு சிறந்த வர்த்தக வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால், தற்போது இருக்கும் பெரும்பாலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் இணையத்தில் உள்ள வெளிநாட்டு மொழிகளில் உள்ள தரவுகளை கொண்டே இயங்குகின்றன. இதை மாற்றுவதற்கு இந்திய மொழிகளில் அதிகப்படியான தரவுகள் இணையத்தில் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். மேலும், நம் நாட்டின் சாமானிய மக்களும் தங்களுடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அனைத்து பாரத மொழிகளிலும் உருவாக்க வேண்டும். இது தொழில்முனைவோர்களுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரிதும் உதவியாக இருக்கும்" என்றார்.

மேலும், லித்தியம் பேட்டரி தயாரிப்பு குறித்து பேசுகையில், "லித்தியம் பேட்டரியின் மின்சார சேமிப்பு திறன்களை அதிகரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் வர்த்தக விமானங்களை கூட மின்சார தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கும் சாத்தியம் உள்ளது" என்றார்.

சத்குரு அவர்கள் பேசுகையில், "தொழில்நுட்பத்தில் இருப்பவர்கள் கற்பனை செய்து பார்க்கக்கூடியதை விட அதிக வேகமாக செயற்கை நுண்ணறிவு வளரும். அது இப்போது நிகழ்வதை விட அதிக வேகத்தில் நிகழவேண்டும் என்று நான் விரும்புகிறேன், அப்போதுதான் மனிதர்கள் 'இருத்தலின்' மதிப்பை உணர்வார்கள். அதோடு எப்படி இருப்பது என்பது உலகிலேயே மதிப்பானதாகிவிடும்.

கட்டுப்பாடுகளை கடந்து சமநிலையோடு, அமைதியாக, ஆனந்தமாக வாழ்வது எப்படி என்பதை மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த 15 - 25 ஆண்டுகளில் மனதை ஆரோக்கியமாக வைத்து கொள்வதே ஒரு மிகப்பெரிய சவாலாக மாறிவிடும். ஏற்கனவே, மண் வள குறைப்பாட்டால் நம் உடல் ஆரோக்கியம் குறைந்து வருகிறது. அதனோடு சேர்ந்து மன ஆரோக்கியமும் குறைந்தால் அது மிகப்பெரும் பிரச்சனை ஆகிவிடும்” என்றார்.