மருத்துவர்களுக்கு கொரோனா இருந்தாலும் நோயாளிகளுக்கு சிகிச்சை! – பிரான்ஸ் புதிய உத்தரவு!
மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் அவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் என பிரான்ஸ் நாடு தளர்வுகள் அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகள் முழுவதிலும் பல மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவ பணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது.
அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு உறுதியான மருத்துவ பணியாளர்கள் மற்றவர்களை போலவே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். பிரான்ஸிலும் இந்த நிலையே தொடரும் நிலையில் அதிகமான மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா உறுதியானதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை எழுந்துள்ளது.
இதனால் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா லேசான அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் உரிய பாதுகாப்புடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் என தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை அல்லது பாதிப்பு எண்ணிக்கை குறையும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.