சென்னையில் அதிகாலையிலும் தொடரும் மழை: இன்றைய இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது
சென்னையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தாலும் நேற்று காலை முதல் வெயில் அடிக்க தொடங்கியதால் மழை முடிந்துவிட்டதாக பலர் எண்ண தொடங்கினர். ஆனால் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய கனமழை தொடர்ந்து ஐந்து மணி நேரம் கொட்டி தீர்த்தது மட்டுமின்றி விட்டுவிட்டு அதிகாலை வரை தொடர்ந்தது. தற்போதுகூட மிதமான மழை சென்னையில் பெய்து வருகிறது
சென்னையின் முக்கிய பகுதிகளான கிண்டி, தரமணி, வேளச்சேரி, அடையாறு, திருவான்மியூர், எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இன்றும் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், புதுப்பேட்டை, வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் மின்சார துண்டிப்பு காரணமாக சென்னையில் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.