சென்னையில் நள்ளிரவு 2 மணி வரை கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்
சென்னையில் இன்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னையே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
அதுமட்டுமின்றி சரியாக அலுவலகம் முடியும் நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்ததால் இரவு 10 மணிக்கு மேலும் இன்னும் பலர் வீடு திரும்பாமல் உள்ளனர். பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால் மெட்ரோ ரயில் ஓடும் பாதையில் உள்ளவர்கள் மட்டும் வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்
இந்த நிலையில் சென்னையில் நள்ளிரவு 2 மணி வரை கனமழை நீடிக்கும் என சற்றுமுன்னர் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர். சென்னையில் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடும் வாய்ப்பு இருப்பதால் அவர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்