1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 29 பிப்ரவரி 2020 (15:24 IST)

மாரத்தான் ஓகே; போராட்டம் கூடாது! – சென்னையில் 15 நாட்கள் போராட தடை!

சென்னையில் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் போராட்டம் உள்ளிட்டவற்றை நடத்த 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தால் ஏகப்பட்ட உயிரிழப்புகளும், பொருள் இழப்புகளும் ஏற்பட்டன.

இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி பிப்ரவரி 28ம் தேதி இரவு முதல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணி, மனிதசங்கிலி, அரசியல் பொதுக்கூட்டம் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையானது மார்ச் 14ம் தேதி இரவு வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இவை தவிர, வழக்கமாக நடைபெறும் திருமண ஊர்வலங்கள், கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் மாரத்தான் போட்டிகள் உள்ளிட்டவற்றை நடத்த தடை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.