1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified சனி, 29 பிப்ரவரி 2020 (10:58 IST)

தமிழகத்தின் ஜான்சி ராணியே! சிங்கப் பெண்ணே! – சசிகலா புஷ்பாவுக்கு ஒட்டப்பட்ட போஸ்டர்!

சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்.பி சசிகலா புஷ்பாவிற்கு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பியாக பதவி வகித்து வந்தவர் சசிகலா புஷ்பா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். அதற்கு பிறகு தொடர்ந்து பல்வேறு இடங்களில் அதிமுகவை விமர்சித்து வந்தார் சசிகலா புஷ்பா. அதிமுகவில் இருந்து கொண்டே ஒருவர் அதிமுகவை விமர்சிப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தனது ராஜ்யசபா பதவிகாலம் முடிய இருக்கும் சூழலில் திடீரென அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் சசிகலா புஷ்பா. கூட்டணி கட்சிகளுக்குள்ளேயே எம்.பி ஒருவர் கட்சி மாறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ”தமிழகத்தின் ஜான்சி ராணி, சிங்க பெண்” என்று புகழ்ந்து ஒட்டப்பட்ட போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழிசை சௌந்தர்ராஜன் ஆளுனராக போய்விட்டதால் வருத்தத்தில் இருந்த மீம் கிரியேட்டர்ஸ் இதனால் சந்தோசப்படுவார்கள் என நெட்டிசன்கள் சிலர் கிண்டல் செய்தும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அதை தாண்டி பல நேரங்களில் சசிகலா புஷ்பாவை திட்டியிருந்த பாஜகவே அவருக்கு சிங்க பெண் பட்டம் வழங்கியிருப்பதுதான் பேச்சாக இருக்கிறது.