ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.! கைதான 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்.!!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேருக்கு ஐந்து நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்(52). இவர் கடந்த 5-ம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார் 10 தனிப்படைகளை அமைத்து துப்பு துலக்கினர். தொடர்ந்து, மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகள் 10 பேர் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், கொலைக்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. உண்மை நிலை வெளியே வரவேண்டும் என்றால் சிபிஐ விசாரணைக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மாற்ற வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்து நீதிமன்றத்தை நாடினர். அவர்களை ஏழு நாட்கள் காவலில் விசாரிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகளை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.