வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (09:47 IST)

ஆம்ஸ்ட்ராங் இடத்தை நிரப்ப போகும் பா.ரஞ்சித்? அரசியலுக்குள் வருகிறாரா?

Pa Ranjith armstrong

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நிலையில் அந்த பொறுப்பை பா.ரஞ்சித் ஏற்றுக் கொள்ளப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாயாவதியின் தலித்திய கோட்பாடு கொண்ட கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். வடசென்னையில் பலருக்கும் பழக்கமான ஆம்ஸ்ட்ராங், அம்பேத்கரிய கொள்கைகளை கறாராக முன்வைத்து பேசுபவர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சி வளர்வதற்கு காரணமாக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னையில் பகுஜன் சமாஜ் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி மாயாவதியை அழைத்து வந்து பேச செய்தவர். தற்போது அவரது இறப்பால் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியில் வெற்றிடம் உண்டாகியுள்ளதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் அவரது பொறுப்பை யார் ஏற்க போவது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் பெயரும் அடிப்படுவதாக பேசிக் கொள்ளப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங்கின் நண்பரான பா.ரஞ்சித்தும் அம்பேத்கரிய கொள்கைகளை பின்பற்றுபவர். மேலும் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் நிகழ்வுகளில் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொள்வது வழக்கம். அதுபோல பா.ரஞ்சித்தும் ஆரம்ப காலங்களில் ஆம்ஸ்ட்ராங் நடத்தும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பிலான கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆம்ஸ்ட்ராங்கிற்கு பிறகு வலுவான ஒரு நபர் கட்சியை நடத்த முடியுமென்றால் அது பா.ரஞ்சித்தாக இருக்க வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
 

தொடர்ந்து தலித் விடுதலை பேசி வரும் பா.ரஞ்சித் இதுவரை எந்த தலித்திய அரசியல் கட்சிகளுக்கும் நேரடி ஆதரவு தெரிவித்ததோ, உறுப்பினராகவோ வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவர் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினராக இல்லாத நிலையில் அவரை உடனடியாக அக்கட்சியின் மாநில தலைவராகவே ஆக்குவது ஏற்கனவே கட்சியில் உள்ளோரிடையே பிணக்கை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.

இது எல்லாமே வெறும் பேச்சாகவே இருந்து வரும் நிலையில் அடுத்த மாநில தலைவர் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் நிலைபாடு என்ன, பா.ரஞ்சித்தின் முடிவு என்ன? அரசியலில் இறங்குவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edit by Prasanth.K