1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 11 ஜூலை 2024 (14:57 IST)

இளநிலை நீட் கலந்தாய்வு எப்போது.? உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.!!

Neet SC
இளநிலை நீட் கலந்தாய்வு ஜூலை மூன்றாவது வாரத்தில் இருந்து நான்கு சுற்றுகளாக  நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது தொடர்பாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன
 
அதேபோல், இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித்துறை மூலம் 44 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
 
அதில், ‘இளநிலை நீட் கலந்தாய்வு செயல்முறை ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கி நான்கு சுற்றுகளாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு செயல்பாட்டின் போதோ அல்லது அதற்குப் பிறகோ, முறைகேடுகளில் பயனடைந்த மாணவர்கள் விண்ணப்பத்திருந்தால், அந்த விண்ணப்பம் எந்தக் கட்டத்திலும் ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 
இதை அடுத்து இந்த வழக்கு மீதான விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.