கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் முடிவது எப்போது? ரயில்வே நிர்வாகம் தகவல்..!
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளை முடித்துவிட்டு ரயில் நிலையம் செயல்படுவது எப்போது என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் முக்கிய பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் மாறிய நிலையில், சென்னை நகரில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல மக்கள் அவதியுற்று வருகின்றனர். பேருந்து வசதியுடன் மட்டுமே இருக்கும் நிலையில், மெட்ரோ மற்றும் மின்சார ரயில் வசதியும் கிளாம்பாக்கம் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ₹20 கோடி மதிப்பீட்டில், வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க சமீபத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வரை நடைமேடையும் அமைய உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகளை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய ரயில் நிலையத்தில் மூன்று நடைமேடைகள், ரயில் நிலைய மேலாளர் அறை, டிக்கெட் அலுவலகம், வாகன நிறுத்தம், சிசிடிவி கேமராக்கள், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Siva