செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 12 மே 2020 (17:12 IST)

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 27ம் தேதியே நடைபெறத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென தேர்வு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தேர்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சமீபத்தில் பேட்டியளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று தெரிவித்தார்

இந்த நிலையில் இன்று காலை பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 1ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்தார். அதுமட்டுமன்றி ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரையிலான தேர்வு அட்டவணையையும் அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிக் கல்வித் துறையின் இந்த அறிவிப்புக்கு பெருவாரியான வரவேற்பு கிடைத்தது

இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ’தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கு என்ன அவசரம்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் இந்த நேரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த வேண்டுமா? என்றும் பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கவேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தன் பங்கிற்கு குழப்பத்தை அதிகப்படுத்துவது நியாயமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்ப்பை தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.