இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது - மாயாவதிக்கு வெற்றி!
FILE
பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரும் மசோதாவை நிறைவேற்ற மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கடுமையாகப் போராடியது. இந்த மசோதாவுக்காகத் தான் சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது மாயாவதி காங்கிரஸூக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சி கவிழாமல் காப்பாற்றினார்.
இந்த சூழலில் காங்கிரஸ் அரசை வெளியிலிருந்து ஆதரவு தரும் சமாஜ்வாடி கட்சி, இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்தது. சமாஜ்வாடி கட்சி செய்த தொடர் அமளியால் மசோதா தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மாயாவதி, நேற்று துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியைக் கடுமையாக விமர்சித்தார். இன்று அதற்காக தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்தார்.
இன்று மசோதாவை நிறைவேற்ற மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்த போது இன்றும் கடும் அமளியில் ஈடுபட்ட சமாஜ்வாடியின் எதிர்ப்பையும் மீறி இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. மசோதா நிறைவேறும் போது சமாஜ்வாடி உறுப்பினர்கள் இருவரை அவை நிர்வாகம் வெளியேற்றியது. அக்கட்சியின் பிற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்றத்தில் இம்மசோதா நிறைவேறியதை அடுத்து உத்தரபிரதேச மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 18 லட்சம் அரசுப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
