1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (17:10 IST)

மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு.! காங்கிரஸின் திட்டம் பலிக்காது..! பிரதமர் மோடி உறுதி..!

PM Modi
நாட்டில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் அதை நடக்க விடமாட்டேன் என்று பிரதமர் மோடி உறுதியாக கூறியுள்ளார்.
 
கர்நாடகாவின் பாகல்கோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கர்நாடகாவில் பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறிக்கும் பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது என்றார்.
 
வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் கொண்டுவர திட்டமிட்டுள்ளது என குற்றம் சாட்டிய அவர்,  ஆனால், அதை நடக்க விடமாட்டேன் என்று கூறினார்.
 
மத அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் ஏற்கெனவே தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர் என்றும் இந்த முறையும் அவர்களின் தேர்தல் அறிக்கையில் அதேபோன்ற ஒரு சிக்னலும் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். உங்கள் உரிமைகளை பாதுகாக்க, உங்கள் இடஒதுக்கீட்டை பாதுகாக்க நான் எந்த எல்லைக்கும் செல்வேன் என்று பிரதமர் கூறினார்.

 
60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் காங்கிரசால் வறுமையை ஒழிக்க முடியவில்லை என்றும் தேர்தல் சமயங்களில் போலியாக என் குரலில் வீடியோக்களை உருவாக்கி வருகிறார்கள் என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்