1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (12:42 IST)

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு..! வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.!!

Modi
பிரதமர் நரேந்திர மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு  வரும் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 
 
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், மற்ற மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
 
இதனிடையே இந்து, சீக்கிய தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களின் பெயரால் பாஜகவிற்கு வாக்கு கேட்டதாக கூறி பிரதமர் மோடியை தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
அதில், கடந்த ஒன்பதாம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் விதிகளை மீறி பிரதமர் மோடி பேசியதாக குறிப்பிட்டுள்ளார். தெய்வங்கள் பெயரை கூறி வாக்கு சேகரித்ததாகவும், எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் பிரதமர் மோடி பேசியதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால், ஆறு ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவிக்கப்பட்ட நீதிபதி சச்சின் தத்தா இன்று விடுப்பில் சென்றதால் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. வரும் 29ஆம் தேதி இந்த மனு மீண்டும் நீதிபதி சச்சின் தத்தா முன்னிலையில் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.