முஸ்லீம் தொகுப்பாளரை பார்க்க மறுத்த ஹிந்து அமைப்பைச் சேர்ந்த நபர்: டிவி ஷோவில் நடந்த சர்ச்சை
தனியார் தொலைக்காட்சி ஒன்றில், ஜொமேட்டோ பிரச்சனை தொடர்பாக நடத்தப்பட்ட விவாதத்தில் முஸ்லீம் தொகுப்பாளரை பார்க்க மறுத்து தன் கைகளால் கண்களை மறைத்துள்ளார் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த நபர்.
சமீபத்தில் ஜொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அமித் சுக்லா என்பவர், உணவு டெலிவரி செய்ய வந்தவர் முஸ்லீம் என்பதால் வாங்க மறுத்துள்ளார். இதன் பின்பு அந்த நிறுவனத்திடம் சுக்லா வேறு நபரை அனுப்புமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜோமேட்டோ நிறுவனம் “உணவுக்கு எந்த மதமும் இல்லை, உணவே ஒரு மதம் தான்” என கூறி, அமித் சுக்லாவின் கோரிக்கையை மறுத்தது. இதைத் தொடர்ந்து சுக்லாவிற்கு அம்மாநில போலீஸார் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சியில், விவாதம் நடைபெற்றது. அந்த விவாத நிகழ்ச்சியில் ”ஹம் ஹிந்து” என்ற ஹிந்து அமைப்பினைச் சேர்ந்த அஜய் கௌதம் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின் இடையில் ”கலித்” என்ற இஸ்லாமிய தொகுப்பாளர் தோன்றி, ஒரு குறிப்பிட்ட பகுதியை தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது அந்த தொகுப்பாளரைத் தான் பார்க்கமாட்டேன் என கூறி, இரு கைகளாலும் தன் கண்களை மூடிகொண்டார்.
இவரின் இந்த செயலைக் குறித்து அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை எழுத்தாளர் அனுராதா பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில், தொலைக்காட்சியின் செய்தி அறையில், அஜய் கௌதம் கண்டிக்கத்தக்க வகையில் நடந்துகொண்டதை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. பத்திரிக்கை நெறிமுறைகளின் படி, அஜய் கௌதமை இனி அழைப்பதில்லை என தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது என கூறியுள்ளார். அஜய் கௌதமின் இந்த செயலை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பலர் கடுமையான விமர்சனங்களை பகிர்ந்துவருகிறார்கள்.