புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (12:33 IST)

வாட்ஸ் ஆப்-ல் தலாக் அனுப்பிய கணவர்: முத்தலாக் சட்டத்தின் கீழ் புகார் அளித்த மனைவி..

மஹாராஷ்டிராவில் வாட்ஸ் ஆப் மூலமாக மூன்று முறை தலாக் கூறிய கணவருக்கு எதிராக மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஜனாத் பேகம். இவரது கணவரின் பெயர் இம்தியாஸ். கடந்த நவம்பர் மாதம் 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, இவரது கணவர் வேறு பெண்ணுடன் உறவில் இருந்து வந்துள்ளார். இதனிடையே அப்பெண்ணுக்கு வாட்ஸ் ஆப் மற்றும் தொலைப்பேசி வாயிலாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.

தனது கணவர் தலாக் கூறியதும் ஏற்பட்ட அதிர்ச்சியல், அவரது வயிற்றில் இருந்த குழந்தை குறை மாதத்தில் பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜனாத் பேகம் தனது கணவருக்கு எதிராக முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளார். அப்போது முத்தலாக் தடை சட்டம் அவசர சட்டமாக இருந்ததால், அதன் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸார் தயங்கியுள்ளனர்.

அதன் பிறகு தற்போது முத்தலாக் தடை மசோதா சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான அவுரத் இ ஷரியத் ஆலோசனையின் படி, ஜனாத் பேகம் புதிதாக கொண்டுவரப்பட்ட சட்டத்தின் கீழ் தனது கணவரை எதிர்த்து புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் ஜமாத் பேகமமின் கணவர் இம்தியாஸ் மீது, முத்தலாக் தடை சட்டம் ஐபிசி 498. 406 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் இம்தியாஸின் தாய் ரேஹன்னா ஹுசைன் படேல் மற்றும் தங்கை சுல்தானா படேல் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்தலாக் தடை சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியப் பிறகு பதியப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.