வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (21:26 IST)

முத்தலாக் சட்டம் குறித்து தமிழக முஸ்லிம் பெண்களின் கருத்து என்ன?

பிரமிளா கிருஷ்ணன்
 
இஸ்லாமிய பெண்களை விவாகரத்து செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை முத்தலாக் தடை சட்டம் கொண்டுவருகிறது என மத்திய அரசு தெரிவித்து, மாநிலங்கவையில் அந்த சட்டத்தை நிறைவேற்றினாலும், அந்த சட்டம் பெரும்பாலான இஸ்லாமிய பெண்களால் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் முத்தலாக் தடை சட்டத்தை எதிர்க்கும் பெண்கள், இந்த சட்டம் மேலும் பெண்களை அவர்களின் குடும்ப அமைப்பில் இருந்து விலக்கிவைக்கும் சட்டமாக மாறிவிடும் என்கிறார்கள். முத்தலாக் சொல்லும் வழக்கம் தமிழகத்தில் பரவலாக இல்லை என்றும், வெகுசிலர் அரிதாக சொல்லும் முத்தலாக் முறையை சீர்படுத்துவதற்கு பதிலாக அரசு புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது என விமர்சிக்கிறார்கள்.
 
முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக ஒலிக்கும் குரல்களில் ஒன்று சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த அக்கு ஹீலர் கதீஜா பீவியின் குரல்.
 
அக்கு ஹீலர் கதீஜா பீவி
 
''மூன்றுமுறை தலாக் என ஒரு சந்திப்பில் ஒரு ஆண் சொல்லிவிட்டு மனைவியை பிரிவது முத்தலாக் என்ற கருத்து சமூகத்தில் நிலவுகிறது. ஆனால் உண்மையில் முத்தலாக் என்பது மூன்று முறை சொல்வது அல்ல. மூன்று முறை தலாக் சொல்வதற்கு இடையில் நீண்டகாலம் இடைவெளி தரப்படும். தலாக் சொல்லும்போது சாட்சிகள் இருக்கவேண்டும் என்ற நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. முத்தலாக் என்பதை ஒரேமுறை சொல்லிவிட்டுப் பிரிந்தால் அதனை ஜாமாத் ஏற்றுக்கொள்ளாது,'' என்கிறார் கதீஜா பீவி.
 
வெளிநாட்டில் வாழும் ஆண்கள் அலைபேசியில் ஒரே முறையில் முத்தலாக் கூறிவிட்டு, பெண்ணை விவாகரத்து செய்த சம்பவங்கள் குறித்து கேட்டபோது, இதுபோன்று பாதிக்கப்பட்ட பெண்கள் வெகு குறைவாக உள்ளனர் என்றும், அவர்களுக்கான நீதியை அளிப்பதற்கு பதிலாக, ஒட்டுமொத்த பெண்கள் பின்பற்றும் ஷரியத் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதை ஏற்கமுடியாது என்கிறார் கதீஜா.
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த முகமது
 
''ஒரே சந்திப்பில் மூன்று முறை தலாக் சொல்வது குர்-ஆனில் உள்ள விதிகளுக்கு எதிரானது. இதனை இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்கள் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமிய மார்க்கத்தின் வழிகளை அறியாதவர்கள், விழிப்புணர்வு இல்லாமல், முத்தலாக் கூறுவதை ஷரியத் சட்டம் ஏற்காது. பெண்களின் நலனில் அக்கறை உள்ள அரசு, முதலில் இஸ்லாமிய பெண்களின் அமைப்பினரிடம் பேசி, கருத்துக்களை கேட்காமல், எங்கள் மத சட்டத்திற்கு எதிரான ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது,''என்கிறார் கதீஜா.
 
முத்தலாக் தடை சட்டம் மூலம் தவறாக தலாக் சொல்லும் ஆண்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை என்ற விதி குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த முகமதுவிடம் கேட்டோம்.
 
''ஒரே சந்திப்பில் முத்தலாக் சொல்வதை ஜமாஅத் ஒப்புக்கொள்ளாது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தைக்கான பொருளாதார உதவியை கணவனிடம் இருந்து பெற்றுத்தந்துவிட்டுதான் தலாக் ஒப்புக்கொள்ளப்படும். ஆனால் முத்தலாக் தடை சட்டத்தின்படி, அறியாமையால் முத்தலாக் கூறிய ஒரு நபரை மூன்று ஆண்டுகள் சிறையில் அடைத்துவிட்டால், அந்த நபரின் வருமானம் இல்லாமல், அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் மேலும் பாதிக்கப்படுவார்கள். அவர் சிறையில் இருந்து வந்தபிறகும்கூட அந்த பெண்ணிற்கு உதவி கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும்,''என்கிறார் முகமது.
 
மேலும் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டிய சட்டமாக முத்தலாக் தடை சட்டம் இல்லை என்கிறார் முகம்மது. ''முத்தலாக் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை எத்தனை, இந்த பாதிப்பால் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சனை உள்ளதா என ஆராயாமல், பாஜக அரசு தனது விருப்பத்திற்கு ஒரு சட்டத்தை கொண்டுவந்துள்ளது. மாட்டுக்கறி சாப்பிட்டதாக இந்தியாவில் பல இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களின் குடும்பங்களில் உள்ள பெண்களின் நிலை மிகவும் மோசம். அவர்களுக்காக மத்திய அரசு உதவிசெய்யலாம். ஜெய்ஸ்ரீராம் என சொல்லவேண்டும் என கட்டாயப்படுத்தப்படும் இஸ்லாமியர்களின் பாதுகாப்பிற்கு மத்திய அரசு உதவலாம்,''என்கிறார்.
 
ஜிம் பயிற்சியாளர் நிஷா
 
முத்தலாக் விவகாரம் அவசரமாக நிறைவேற்றப்படவேண்டிய சட்டம் இல்லை, இஸ்லாமியர்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தியாக பாஜக அரசு நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார் ஜிம் பயிற்சியாளர் நிஷா.
 
''இஸ்லாமிய பெண்கள் பலர் படிப்பதற்கும், வேலைக்கு போவதற்கும் கூடுதல் வசதிகளை மத்திய அரசு அளிக்கலாம். இன்றளவும் அவர்களிடம் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. இஸ்லாமியர் என்பதால் வேலை கிடைக்காமல் பலர் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை மேம்பட அரசு நலத்திட்டங்களை கொண்டுவரலாம்,''என்கிறார் நிஷா.