1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (10:32 IST)

முன்னாள் கேப்டனின் சாதனையை தகர்த்த ஸ்மிருதி மந்தனா – என்ன தெரியுமா?

மகளிர் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்தார்.


இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் . இந்நிலையில் நேற்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 143 ரன்கள் குவித்தார். இதனையடுத்து 334 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் அந்த அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனையடுத்து இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. 1999க்கு பிறகு முதல் முறையாக இங்கிலாந்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

இதனிடையே மகளிர் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்தார். ஆம், அதிவேகமாக 3000 ரன்களை குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றார். 76 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3000 ரன்கள் எடுத்து ஸ்மிருதி மந்தனா இந்த சாதனை படைத்துள்ளார். இந்திய அணி முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் 88 போட்டிகளில் 3000 ரன்கள் எடுத்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.