புதிய பஞ்சாப் அணியை காண ஆவலாக உள்ளேன்! – ப்ரீத்தி ஜிந்தா ட்வீட்!
ஐபிஎல் ஏலம் நடந்து வரும் நிலையில் புதிய பஞ்சாப் அணியை காண காத்திருப்பதாக அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.
இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்படும் போட்டி தொடராக உள்ளது. கடந்த ஆண்டு வரை ஐபிஎல்லில் 8 அணிகள் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன.
அணிகளுக்கான வீரர்கள் ஏலம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஷிகர் தவான் உள்ளிட்ட முக்கிய கிரிக்கெட் வீரர்களை பஞ்சாப் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது.
இந்நிலையில் ட்விட்டரில் தனது கைக் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா “டாடா ஐபிஎல் ஏலத்தை பார்க்க தயாராக உள்ளேன். சிவப்பு ஏலத்துடுப்புக்கு பதிலாக என் கைகளில் அழகான குழந்தையை வைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் புதிய பஞ்சாப் அணியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். தொடர்ந்து வாழ்த்துகள் பஞ்சாப் அணி. எங்களது திட்டங்களை செயல்படுத்துவோம். கவனம் செலுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.