உலக கோப்பை வென்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு உண்டா? – ஐபிஎல் அணிகள் எதிர்பார்ப்பு!
ஐபிஎல் அணிகளுக்கான வீரர்கள் ஏலம் இன்று தொடங்கும் நிலையில் உலகக்கோப்பை வென்ற யு 19 அணி வீரர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்படும் போட்டி தொடராக உள்ளது. கடந்த ஆண்டு வரை ஐபிஎல்லில் 8 அணிகள் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன.
இதற்கான அணி வீரர்கள் ஏலம் இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்தில் சமீபத்தில் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்று வென்ற யு 19 இளம் வீரர்கள் விளையாட பிசிசிஐ அனுமதி அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிசிசிஐ விதிமுறைகளின்படி, யு 19 அணி வீரர்கள் குறைந்தபட்சம் ஒரு முதல் தர போட்டி அல்லது லிஸ்ட் ஏ போட்டியில் விளையாடியிருக்க வேண்டும் அல்லது ஏலம் நடைபெறுவதற்கு முன்பு 19 வயதை எட்டியிருக்க வேண்டும். ஆனால் கொரோனா மற்றும் சில காரணங்களால் உள்நாட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறாத நிலையில் இந்த விதியில் பிசிசிஐ தற்காலிக தளர்வுகள் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஐபிஎல் அணிகளிடையே உள்ளதாக கூறப்படுகிறது.