புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2019 (16:10 IST)

துவக்கம் முதலே அபாரம்: இரட்டை சதம் விளாசிய மயங்க்!!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசினார். 
 
இந்தியா – வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்கதேசம் மிகவும் சுமாரான ஆட்டத்தையை தந்தது. இந்தியாவின் வேகப்பந்து வீச்சுகளை சமாளிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் திணறினர். 
 
வங்கதேச கேப்டன் மொய்னுல் ஹக் 37 ரன்னும், ரஹீம் 43 ரன்களும் எடுத்தனர். இதுவே அதிகபட்ச ரன்களாகும். தொடக்க ஆட்டக்காரர்களான ஷட்மான் இஸ்லாம், இம்ருல் காயீஸ் ஆகியோர் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தது வங்கதேச அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 
 
58.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 150 ரன்கள் மட்டுமே பெற்றது வங்கதேசம். இதனைத்தொடர்ந்து இந்திய அணி தனது ஆட்டத்தை துவங்கியது. 
ஆட்டம் அமோகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ரோகித் சர்மா 6 ரன்களுடனும், விராட் கோலி ஒரு ரன் கூட எடுக்காமலும் அவுட் ஆகினர். புஜாரா 54 ரன்கள், ரகானே 86 ரன்கள் அடித்து அவுட்டாகினர். துவக்கம் முதலே களத்தில் அதிரடி காட்டி வந்த இளம் வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசியுள்ளார். 
 
இது அவரது இரண்டாவது இரட்டை சதமாகும். ஏற்கனவே தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை அடித்திருந்தார் மயங்க். தற்போது 103 ஓவர் முடிந்துள்ள நிலையில் 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 384 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் மயங்க அகர்வால், ஜடேஜா உள்ள நிலையில் இந்திய அணி 234 ரன்கள்  வங்கதேச அணியைவிட முன்னிலையில் உள்ளது.