தென்னாப்பிரிக்கா தொடரை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு… கவாஸ்கர் சொல்லும் அட்வைஸ்!
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் முகாமிட்டு அங்கு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. டி 20 தொடர் சமனில் முடிந்த நிலையில் இப்போது ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த இரு தொடர்களிலும் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க உள்ளது. அதற்காக இந்திய வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தென்னாப்பிரிக்கா சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் வென்றதேயில்லை. அந்த சாதனையை இந்த முறை நிகழ்த்துவதற்கு நல்ல வாய்ப்புள்ளதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது பற்றி பேசியுள்ள அவர் “இந்த முறை டெஸ்ட் தொடரை வெல்வதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. தென்னாப்பிரிக்கா அணியில் இரண்டு தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. வீரர்கள் சிறப்பாக விளையாடினால் முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு மேல் சேர்க்க முடியும். பந்து புதிதாக இருக்கும் போது ரன்கள் சேர்க்க கடினமானதாக இருக்கும். ஆனால் அதையெல்லாம் சமாளித்து விளையாடுவதுதான் டெஸ்ட் கிரிக்கெட். ” எனக் கூறியுள்ளார்.