இதுதான் உலகக் கோப்பையை நடத்தும் லட்சணமா?... பிசிசிஐ மேல் குற்றம்சாட்டும் பாக். ரசிகர்கள்!
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 305 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் ஆஸி அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பேட் செய்யும் போது 16 ஆவது ஓவரில் மின்சார தடை காரணமாக டி ஆர் எஸ் முறை அப்பீல் செய்வதில் சில ரீப்ளைக்களைப் பார்க்க முடியாது என மூன்றாம் நடுவர் சொல்ல, அது களத்தில் இருந்த ஆஸி மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு சொல்லப்பட்டது. இந்த குளறுபடி பின்னர் 19 ஆவது ஓவரில் சரி செய்யப்பட்டது.
இந்த தகவல் சமூகவலைதளங்களில் பரவி, பிசிசிஐ மேல் விமர்சனங்கள் எழ வழிவகுத்துள்ளது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் ரசிகர்கள் பிசிசிஐ மேல் “இதுதான் உலகக் கோப்பையை நடத்தும் லட்சணமா” என கடும் விமர்சனங்களை வைத்துள்ளனர்.