டீமை விட்டு நீக்கியது ‘பளார்’னு அறைந்தது போல இருந்தது! – மனம் திறந்த அஸ்வின்!
2010ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் நடந்த தனது மோசமான அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார் கிரிக்கெட் வீரர் அஸ்வின்.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் சுவாரஸ்யமான சம்பவங்கள் பலவற்றை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 2010க்கு பிறகு ஐபிஎல்லில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேசியுள்ளார்.
அதில் அவர் “கடந்த 2010-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் மோசமாக விளையாடியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நான் நீக்கப்பட்டேன். எனது முகத்தில் யாரோ அறைந்தது போல இருந்தது. 20 ஓவர் போட்டியில் பந்து வீசுவது என்பது முதல் தர போட்டியில் வீசுவதை விட எளிமையாக இருக்கும் என எண்ணிக் கொண்டிருந்தேன்.
அணியில் இருந்து நீக்கப்பட்டதால் ஹோட்டலில் இருந்து வெளியேறி வீட்டிற்கு சென்று டிவியில் ஐபிஎல் போட்டிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். உண்மையில் எனக்கு சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளமிங்குடன் பிரச்சினை இருந்தது. அதனால் அவர் என்கூட பேசக்கூட இல்லை. ஆனால் அவர் மீது எனக்கு மரியாதை இருந்தது. ஒருநாள் இந்த நிலைமை மாறும் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்” என கூறியுள்ளார்.
மேலும் ஜடேஜாவுக்கு எந்த போட்டியையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் இருக்கிறது என்றும், தொடர் பயிற்சிகள் மூலம் ஜடேஜாவை போல தகுதி பெற விரும்புவதாகவும் கூறியுள்ளார் அஸ்வின்.