வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (14:37 IST)

அசாம் வெள்ளத்துக்கு முஸ்லிம்கள்தான் காரணமா?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில், அண்மையில் நிகழ்ந்த மோசமான வெள்ளம் அம்மாநிலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.


ஆனால், இப்படி ஒரு வெள்ளம் ஏற்பட முஸ்லிம்கள் தான் காரணம் என்று குற்றம்சாட்டி ஆன்லைனில் செய்திகள் உலவி வந்தன. இதில் உண்மை என்ன? இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் பிபிசி தமிழுடன் பேசினார்.

போலீஸ் வந்து கதவை தட்டியபோது மணி அதிகாலை 3 மணி. நாசிர் ஹுசைன் லஸ்கருக்கு ஏதும் புரியவில்லை. அசாமில் பல ஆண்டுகளாக கட்டடத்தொழிலாளியாக பணியாற்றி வந்த இவர், மாநிலத்தின் வெள்ள பாதுகாப்பு கட்டுமானப் பணிகளில் உதவியவர்.

ஆனால், கைது செய்யப்பட்ட அன்று காலை, பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக, வெள்ளத்தை தடுக்கும் அணையை சேதப்படுத்தியதாக சொல்லப்பட்டது.

ஆனால், "வெள்ள பாதிப்புகளிலிருந்து மக்களை காக்கும் அணைகளை கட்ட 16 ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். நான் ஏன் அதை சேதப்படுத்த வேண்டும்?" என்கிறார் நாசிர் ஹுசைன்.

20 நாட்கள் சிறையிலிருந்தபின், இவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கு முறையான ஆதாரமில்லாததால் இவருக்கு பிணை வழங்கப்பட்டது. ஆனால், சமூக வலைதளங்களில் இவர் குறித்து பரவும் செய்தி மட்டும் நிற்கவில்லை.

வழக்கமான மழைக்கால வெள்ளத்துடன் இந்த ஆண்டு முன்கூட்டியே வந்த கூடுதல் மழைப்பொழிவும் இணைந்துகொண்டதால், மே, ஜூன் இரு மாதங்களில் வந்த இரண்டு வெள்ளங்களில் 192 பேர் உயிரிழந்தனர்.

ஆனால், சமூக வலைதள பதிவர்கள் பலர், வேறு ஒரு மோசமான காரணம் இருந்ததாக கருதினர். ஆனால், இந்த வெள்ளம் மனிதனால் நிகழ்த்தப்பட்டது என்று எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவர்கள் ஒரு குற்றச்சாட்டை வைத்தனர். அதாவது, இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியான சில்சாரில் உள்ள அணைகளை, மூன்று இஸ்லாமிய ஆண்கள் சேதப்படுத்தி இந்த வெள்ளத்தை உருவாக்கினர் என்று கூறினர்.

நாசிர் ஹுசைன் மட்டுமல்ல, அவருடன் இன்னும் மூன்று பேர் கைது செய்யப்பட்டதையடுத்து சமூக வலைதளப் பதிவுகள் குவியத்தொடங்கின. அவற்றுள் சில இதனை 'வெள்ள ஜிஹாத்' என்றும் குறிப்பிட்டன.

இந்தப் பதிவுகள் ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டன. செல்வாக்கு மிக்க உறுதி செய்யப்பட்ட சமூக வலைதளக் கணக்குகள் கூட இதனை பகிர்ந்தன. வெள்ள ஜிஹாத் என்ற வார்த்தையுடன் சில உள்ளூர் ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

ஆனால், அவர் சிறையிலிருக்கும்போது, அவரது பெயரைக்குறிப்பிட்டு 'வெள்ள ஜிஹாத்' என்று ஒரு செய்தி சேனலில் செய்தி வெளியான போதுதான் இந்த நிலைமையின் தீவிரத்தை அவர் உணர்ந்து கொண்டார்.

"எனக்கு பயத்தில் அன்றிரவு தூக்கமே வரவில்லை. காரணம், என்னோடு அறையிலிருந்தவர்கள் அதையே பேசிக்கொண்டிருந்தார்கள். நான் தாக்கப்படலாம் என்று பயத்தில் இருந்தேன்" என்கிறார் நாசிர்.

உண்மை என்ன?

1950லிருந்தே வெள்ள மேலாண்மைக்காக அணைகள் கட்டுவது அசாமில் தொடர்ந்து வருகிறது. தற்போது அசாமில் 4000 கி.மீ நீளமுள்ள அணைகள் உள்ளன. இதில் பெரும்பகுதி சேதமடையும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

பராக் ஆற்றின் அணையில் கடந்த ஜூலை 23ஆம் தேதி சேதம் ஏற்பட்டு வடகிழக்கு இந்தியா, கிழக்கு வங்காளதேசத்தில் நீர்புகுந்தது. முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான பெத்துக்கண்டி என்ற இடத்தில் நடந்த இந்த உடைப்பு, இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியான சில்சாரில் வெள்ளம் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று.

ஆனால், "இதுமட்டுமே காரணமல்ல. அதுபோக இந்த ஒரு பகுதியில் இருந்து மட்டும் தண்ணீர் நகருக்குள் நுழையவில்லை" என்கிறார் சில்சார் பகுதியின் காவல் கண்காணிப்பாளர் ராமன்தீப் கவுர்.

நாசிர் ஹுசைன் உட்பட இஸ்லாமிய ஆண்கள் ஐவரின் கைதுக்கு வழிவகுத்ததும் இந்த நிகழ்வாகத்தான் இருக்கும் என்று பிபிசி புரிந்துகொள்கிறது. ஆனால், உடைப்புக்கு அவர்கள்தான் காரணம் என்பதற்கு ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பேசும்போது, "பழுதுபார்க்காததாலும், பராமரிப்பின்மையாலும் ஏராளமான அணைகள் சேதமடைந்துள்ளன" என்கிறார் மும்பையில் உள்ள ஜாம்ஷெட்ஜி டாடா பேரிடர் மேலாண்மை கல்லூரி (Jamsetji Tata School of Disaster Studies) இணைப் பேராசிரியர் நிர்மால்யா சவுத்ரி.

மேலும், "அதில் சில உடைப்புகள் மனிதர்களால் நிகழ்த்தப்பட்டவையாக இருக்கலாம். தங்கள் பகுதிக்கு வெள்ளம் வரக்கூடாது என்பதற்காக அவை சேதப்படுத்தப்பட்டிருக்கலாம்" என்றும் தெரிவிக்கின்றனர். சில்ச்சார் காவல்துறையும் இதை ஒப்புக்கொண்டுள்ளது.

"வெள்ள ஜிஹாத் என்று ஏதும் கிடையாது. முன்பு, நீரை வெளியேற்றுவதற்காக நிர்வாகமே அணைகளில் பிளவு ஏற்படுத்து, இந்த முறை சிலர் அதை தங்கள் கைகளில் எடுத்துகொண்டுவிட்டனர்" என்கிறார் காவல் கண்காணிப்பாளர் கவுர்.

அத்துடன், "இதுபோன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது. ஆனால், இது ஒரு நிர்வாக ரீதியிலான பிரச்னை, இதற்கு முதிர்ச்சியுடன் கூடிய பதில் அளிக்கப்பட வேண்டும் என்றும் தான் நினைப்பதாக தெரிவிக்கிறார் பேராசிரியர் சௌத்ரி.

முஸ்லிம் என்பதால் இந்த குற்றச்சாட்டு

சமூக வலைதளங்களில் இந்த flood jihad என்ற தேடல் மட்டும், கூகுள் ட்ரெண்ட்ஸ்-இல் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சத்தை இந்த ஜூலை மாதம் எட்டியுள்ளது. ஆனால், ஒரு இஸ்லாமிய-எதிர்ப்பு தொடர்பான தேடுதல் இப்படியொரு உச்சத்தை எட்டியிருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கக்கூடும்.

கொரோனா பேரிடரின்போது, முஸ்லிம்கள்தான் இந்தியாவுக்குள் கொரோனாவை பரப்பியதாக அப்போது பொய்யான குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டன. (அப்போது கொரோனா ஜிஹாத் என்று சொல்லப்பட்டது).

பிரதமர் நரேந்திர மோதியின் இந்து தேசியவாத கட்சியான பாஜக 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து வன்முறை, வெறுப்பு பிரசாரம், பொய்யானதகவல்கள் ஆகியவை இஸ்லாமியர்களை அதிகளவில் குறிவைப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அக்கட்சி இந்த விமர்சனத்தை மறுக்கிறது.

இந்த நிலையில், சிறையிலிருந்து விடுதலையான பின்பும் நாசிர் ஹுசைன் பயத்திலேயே வாழ்கிறார். நானும் என் குடும்பமும் வீட்டை விட்டு வெளியில் செல்ல பயப்படுகிறோம். என் குழந்தைகள் பள்ளி செல்லவில்லை. தவிர்க்க முடியாத தருணங்களில் தலைக்கவசம் அணிந்துகொண்டு செல்கிறேன். காரணம், யாராவது கோபக்கார ஆசாமியால் அடித்துக்கொல்லப்படுவதை நினைத்து பயமாகவே உணர்கிறேன்.

"நான் முஸ்லிம் என்பதற்காக வெள்ள ஜிஹாத் என்று குற்றம் சாட்டப்பட்டேன். அது பொய்யானது. அதேசமயம் அதை பரப்புகிறவர்கள் செய்வதுதான் மிகவும் தவறானது" என்கிறார் நாசிர்.