நடிகர் ரஜினிகாந்தை, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதுகுறித்து சீமானே பேசியுள்ளார்.
தமிழக அரசியலில் விஜய் கட்சி தொடங்கி களம் இறங்கியுள்ள நிலையில் அரசியல் வட்டாரமே பரபரப்பாக காணப்படுகிறது. முக்கியமாக விஜய்க்கும், சீமானுக்கு இடையே சமீபமாக ஏற்பட்டுள்ள உரசல் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது. இந்நிலையில்தான் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இது அரசியல் ரீதியான சந்திப்பாக இருக்குமோ என பேச்சுகள் எழத் தொடங்கிய நிலையில் அதை சீமானே உறுதி செய்துள்ளார். ரஜினியை சந்தித்து விட்டு வெளியேறும்போது தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபருக்கு பேசிய அவர் “ரஜினியுடன் திரையுலகம், அரசியல் குறித்து பல விஷயங்களை பேசினேன். ரஜினிகாந்தை சந்தித்ததே ஒரு அரசியல்தான். அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை” என பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் 90கள் முதலே அரசியலில் நுழைவதற்காக யோசித்து வந்தாலும் கடைசியில் அந்த முடிவை கைவிட்டார். ஆனாலும் அப்போதிருந்தே தமிழக அரசியலில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய நபராக ரஜினி இருக்கிறார். அதனால் சீமானுடனான இந்த சந்திப்பு விஜய்க்கு எதிரான அரசியல் நகர்வாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Edit by Prasanth.K