செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated: செவ்வாய், 5 ஜூலை 2022 (10:13 IST)

“Ok பூமர்… பூமர் அங்கிள்”… இணையத்தில் வைரலாகும் சொற்கள்… உண்மையில் யார் பூமர்?

சமீபகாலமாக சமூகவலைதளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் சொல்லாக பூமர் என்ற வார்த்தை உருவாகியுள்ளது.

ஆனால் பூமர் என்ற இந்த வார்த்தையின் முழு அர்த்தமும் பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை. இந்த வார்த்தை எப்படி உருவானது, இதன் வரலாற்றுப் பின்னணி என்ன என்பது குறித்து எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான இ பா சிந்தன் தன்னுடைய முகநூலில் விரிவான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அந்த பதிவு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

இ பா சிந்தனின் முகநூல் பதிவு

சமீபத்தில் மிக அதிகமாக சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தையான பூமர் என்பதை தவறாகப் பயன்படுத்துகிறோமோ என்கிற அச்சம் மேலெழுகிறது. ஒரு வார்த்தையின் உண்மையான பொருளில் இருந்து விலகுவது மிகப்பெரிய ஆபத்தில் தான் முடியும்.

 
இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் உலகில் நிலவிய போரற்ற ஒரு திடீர் அமைதியின் காரணமாக உலகெங்கிலும் அதிகமான குழந்தைகள் பிறக்கத்துவங்கியது. நிலையான அரசுகளும் அப்போதுதான் அமைய ஆரம்பித்த காரணத்தினால் அவர்களுக்கு முதன்முதலாக அறிவியல்ரீதியாக முறையான மருத்துவமும் கிடைக்கத் துவங்கியது. இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலகட்டம் வரையிலும் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் என்ன தெரியுமா? முப்பது தான். மருத்துவ வளர்ச்சியின்மை, நிலையான அரசுகள் இல்லாமை, தொடர் போர், பாதுகாப்பின்மை போன்ற பல காரணங்களால் இளவயதிலேயே அதிகம் பேர் இறந்துவிடுவது மிக இயல்பான ஒன்றாக இருந்தது. இதெல்லாம் இரண்டாம் உலகப் போர் முடிந்தபிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. அப்படி மாறத்துவங்கிய காலகட்டத்தில் அதிகமான குழந்தைகள் பூம் என்று சொல்லும் விதமாக பிறந்துகொண்டே இருந்ததால் தான் 1946 முதல் 1964 வரையில் பிறந்த குழந்தைகளை பூமர்கள் என்று அழைத்தார்கள்.


 
அந்த பூமர்கள் தான்  உலக வரலாற்றிலேயே முதன்முறையாக அதிக ஆயுளைக் கொண்டவர்களாகவும், அரசுகள் உருவாக்கிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கோடுபோட்ட வரையறைக்குள் வாழ்வதையும் முறையாக்கி வாழத்துவங்கியவர்கள். அவர்களுடைய முந்தைய தலைமுறையினரை ஒப்பிடுகையில், பூமர்கள் வாழ்ந்தபோது அவர்களின் வாழ்க்கைமுறையும் கொள்கைகளும் மிகவும் முற்போக்கானதாக இருந்திருக்கலாம். ஆனால் இவர்கள் அதிககாலம் வாழ்ந்தபடியால், இவர்களுடைய அடுத்த தலைமுறையினர் வளர்ந்து சமூகத்தில் பங்களிக்க ஆரம்பித்தபோதும் கூட இந்த பூமர்கள் ஆரோக்கியமாக இருந்ததால், பழையதாகிப்போயிருந்த தங்களது கடந்தகால கருத்துகளை அடுத்த தலைமுறையினருக்கு போதித்தும் கட்டாயப்படுத்தியும் வந்தனர். இப்படியாக கடந்தகால பிற்போக்கு சிந்தனைகளை அடுத்துவரும் தலைமுறையினரின் முற்போக்குத்தன்மையைக் கெடுக்கும்விதமாக போதிக்கத் துவங்கியதாலேயே, யார் இதுபோன்று பழமைவாதக் கருத்துகளை அடுத்த தலைமுறையினருக்கு திணிக்க முயன்றாலும் அவர்களைப் பார்த்து “பூமர்” என்று அழைக்கும் வழக்கம் உருவானது.