வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 13 மே 2019 (20:28 IST)

தெருநாய்க்குட்டியை காப்பாற்றிய பெண் 'ரேபிஸ்' தொற்றால் மரணம்

பிலிப்பைன்ஸில் தெரு நாய் ஒன்றிடம் இருந்து ரேபிஸ் நோய் தொற்று பெற்ற நார்வே நாட்டை சேர்ந்த பெண் உயிரிழந்தார்.
24 வயதான பீயர்கீட்ட கலெஸ்டட், தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அங்கு தெருவில் நாய்க்குட்டி ஒன்றினை கண்டெடுத்ததாக அவரது பெற்றோர் கூறினர்.
 
அந்த நாய்க்குட்டியை தன்னுடைய இடத்திற்கு கொண்டு சென்றபோது, அது கடித்ததில் பீயர்கீட்டுக்கு நோய்க்கிருமி தொற்று ஏற்பட்டது.
 
மீண்டும் நார்வே நாட்டிற்கு திரும்பிய சில நாட்களிலேயே அவரது உடல்நிலை மோசமானது. கடந்த மே 6ஆம் தேதி அவர் வேலை பார்த்து வந்த மருத்துவமனையிலேயே பீயர்கீட்ட உயிரிழந்தார்.
 
நார்வேயில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக ரேபிஸ் நோய் தொற்றால் ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல்முறையாகும்.
 
அந்த தெரு நாய்க்குட்டியுடன் விளையாடிய போது அது கீறியதால், அதற்கான ஊசி போட்டுக் கொண்ட பீயர்கீட்ட, மேலும் இதற்காக வேறு எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
 
பீயர்கீட்டக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும், இது போன்ற ஒரு சம்பவம் வேறு யாருக்கும் நிகழக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 
ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டால், மனிதர்களின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்படும்.
 
இதற்கான தடுப்பூசி போடப்படவில்லை என்றால் மரணமும் ஏற்படலாம். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கிறார்கள். குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் இது அதிகம் காணப்படுகிறது.
 
தலைவலி, காய்ச்சல் போன்றவை இதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் ஆகும்.
 
நோய் கடுமையானால், சுவாச செயலிழப்பு ஏற்படலாம்.
 
விழுங்குவதற்கு பயன்படும் தசையில் பிடிப்பு ஏற்பட்டு, ரேபிஸ் தொற்று ஏற்பட்ட நபரால் எதையும் குடிக்க கடினமாக இருக்கும்.
 
விலங்குகள் கடித்தாலோ, கீறினாலோ அந்த காயம் ஏற்பட்ட இடத்தை சோப் போட்டு தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும். தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
ரேபிஸ் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கிறது என்றால், மரணம்கூட ஏற்படலாம்.
 
தீவிரமடையும் முன் கட்டத்தில் இருந்தால், தடுப்பூசியால் சரி செய்ய முடியும். கடித்த உடனேயே இந்த தடுப்பூசி போடப்பட வேண்டும்.