இபிஎஸ்-க்கு எதிரான சிபிஐ விசாரணை ரத்து - ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
இந்த உத்தரவு குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது: "ஒரு டெண்டரின் போது துறை அமைச்சரோ அவருடைய உறவினர்களோ இடம்பெறக்கூடாது என்பது விதி.
ஆனால், இந்த ரூ.4,800 கோடி ஊழல் முறைகேட்டில் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் இருவருக்கு டெண்டர் வழங்கியிருக்கின்றனர். இதில் முதலில் ஒரு மதிப்பீட்டுத் தொகையும் பிறகு அதையே இரட்டிப்பாகக் காட்டி டெண்டர் நடைபெற்றுள்ளது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிய விசாரணை கோரி வழக்கு தொடுத்தோம்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்து அனுப்புகிறோம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சிபிஐ விசாரணைக்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என நாங்கள் வாதாடினோம். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். விசாரிப்பவர்கள் யார் என்பது பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இந்த வழக்கில் என்னுடைய சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார்.
உச்ச நீதிமன்றம் எங்கள் வாதத்தையும் எதிர்தரப்பு வாதத்தையும் கேட்டு இதை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம், சிபிஐ விசாரணை தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது. ஊழல் நடைபெற்றுள்ளதா என்பதற்குள் உச்ச நீதிமன்றம் செல்லவில்லை.
2016 ஆம் ஆண்டில் தேர்தல் சமயத்தில் ரூ. 570 கோடி ரூபாயுடன் கண்டெய்னர் லாரி பிடிபட்டது. 6 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அந்த பணம் யாருடையது என்பது குறித்து கண்டறியப்பட வேண்டும் எனக்கோரி, திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், சிபிஐ இதுகுறித்து இன்னும் விசாரிக்கவில்லை. சிபிஐ இந்த வழக்கை கிடப்பில் போட்டது போல் அல்லாமல் உயர் நீதிமன்றம் டெண்டர் முறைகேடு வழக்கை நேர்மையாக விசாரிக்க வேண்டும். அப்போது உண்மை வெளிச்சத்திற்கு வரும். இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. சிபிஐ விசாரணை வேண்டும் என திமுக கோரவில்லை. திமுக யார் மீதும் வீண்பழி சுமத்தாது" என தெரிவித்தார்.