ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில், ஆரஞ்ச் நதியின் குறுக்கே கட்டப்பட்டு வந்த ஒரு பாலத்தின் ஒரு பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தின்போது பாலத்தின் ஒரு பகுதியை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த ஐந்து பேரின் உடல்நிலையும் தற்போது சீராக இருப்பதாக வல்சாத் மாவட்ட ஆட்சியர் பவ்யா வர்மா உறுதிப்படுத்தினார்.
சுமார் ரூ. 45 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பாலம், இன்னும் ஓராண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. பாலம் இடிந்ததற்கான சரியான காரணத்தை கண்டறிந்து, விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran