வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2019 (20:07 IST)

மக்களவைத் தேர்தல்: மோதியை எதிர்த்து வாரணாசியில் போட்டியா? - பிரியங்கா காந்தி பதில்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் விரும்பும் பட்சத்தில் பிரதமர் மோதியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட தயார் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
 
இந்நிலையில், ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரளாவில் பரப்புரையில் ஈடுபட்டு வரும் பிரியங்கா காந்தியிடம், நீங்கள் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அவர், "காங்கிரஸ் கட்சியின் தலைவர் போட்டியிடுமாறு கேட்டுக்கொள்ளும் பட்சத்தில், நான் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொள்வேன்" என்று தெரிவித்தார்.
 
இதன் மூலம், இரண்டாவது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள பிரதமர் நரேந்திர மோதியை எதிர்த்து பிரியங்கா காந்தி களமிறங்குவாரா என்ற கேள்விக்கு மறைமுக பதில் கிடைத்துள்ளது.
 
 
தனது தாயார் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும், சகோதரர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டபோதும் அவர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி அரசியலில் எப்போது நுழைவார் என்ற எதிர்பார்ப்பு நீண்டகாலமாக இருந்து வந்தது.
 
இந்நிலையில், இந்தாண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி பிரியங்கா காந்தி கிழக்கு உத்தரப்பிரதேசத்துக்கான அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டதன் மூலம் முதல் முறையாக தீவிர அரசியலில் நுழைந்தார்.
 
அதுமுதல், வாரணாசி தொகுதியிலிருந்து தனது போட்டி அரசியலை பிரியங்கா காந்தி துவங்குவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், பிரியங்கா காந்தி இவ்வாறான பதிலை தெரிவித்துள்ளார்.
 
 
1972ஆம் ஆண்டு, ஜனவரி 12 ஆம் தேதி ராஜீவ் காந்தி- சோனியா காந்தி தம்பதிக்கு முதல் குழந்தையாக டெல்லியில் பிறந்தார் பிரியங்கா. டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்டம் பெற்றுள்ள அவர், 1997 ஆம் ஆண்டு, தொழிலதிபரான ராபர்ட் வதேராவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன.
 
பிரியங்காவின் தேர்தல் பிரசாரப் பங்கேற்பு என்பது அவரது 16ஆவது வயதில் ஆரம்பித்தது. அப்போது ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார்.
 
1999இல் தேர்தல் பிரசாரத்துக்கு இடையே பிபிசியிடம் பேசிய பிரியங்கா, அரசியல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில், “நான் தெளிவாக இருக்கிறேன். அரசியல் என்னை ஈர்க்கும் விஷயமல்ல, மக்கள் தான் என்னை ஈர்க்கிறார்கள். அவர்களுக்கு தேவையான எதையும் என்னால், அரசியலில் இல்லாமலேயே செய்ய முடியும்” என்று கூறியிருந்தார்.
 
கடந்த 2004ஆம் ஆண்டு, தனது தாய் சோனியா காந்திக்காக அவர் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
 
பிரியங்கா காந்தி அடிக்கடி அவரது பாட்டி இந்திரா காந்தியுடன் ஒப்பிடப்படுகிறார். அவரது உடை உடுத்தும், பேசும் பாணி , தலைமுடி அலங்காரம் உள்ளிட்டவை இந்திரா காந்தியைபோல அமைந்திருப்பதாக கூறப்படுகிறது