புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 25 டிசம்பர் 2024 (18:48 IST)

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும் இக்கொடூரக் குற்றத்தில் வேறு எவரேனும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும்.
 
ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் நிர்பயா நிதியைப் பயன்படுத்தி, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இடங்களைக் கண்டறிந்து, அங்கு ஸ்மார்ட் கம்பங்கள் அமைத்தல், அவசர கால பட்டன்கள், சிசிடிவி கேமரா, தொலைபேசி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல், மாநகரப் பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள், பெண்கள் பாதுகாப்புக்கான அவசர காலத் தொலைபேசி மற்றும் கைப்பேசிச் செயலி வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
 
இவை அனைத்தையும் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இவை முழுமையாகச் செயல்படுகின்றனவா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
 
இவற்றைச் செய்வதில் எவ்விதச் சமரசத்திற்கும் உடன்படாமல் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எவ்விதச் சூழலிலும் பெண்கள் மனவலிமையுடன் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது தொடர்பாகப் போதிய சட்ட உதவி மற்றும் உளவியல் சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம்.
 
இந்த விழிப்புணர்வை, பெண்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் காலக்கட்டத்திலேயே அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
 
 
Edited by Siva