1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (13:06 IST)

இந்தியாவின் ஜிடிபி சரிவு: அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் நிலை என்ன?

உலகளவில் மிகப்பெரிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப் படுத்துவதற்காக அமலாக்கப்பட்ட முடக்கநிலையால் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி -29.9 சதவீதம் சரிவடைந்து உள்ளதாக இந்திய  அரசு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.
 
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் முதல் மூன்று மாதங்களில், அதாவது 2019-2020ஆம் நிதியாண்டில் கடைசி காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 3.1% வளர்ந்தது. இந்தக் காலாண்டின் கடைசி வாரத்தில்தான் நாடு முழுவதும் முடக்கநிலை அமலானது.
 
ஓ.இ.சி.டி என்று பரவலாக அறியப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்றத்துக்கான கூட்டமைப்பின் தரவுகளின்படி அமெரிக்காவில், 2020இல் முதல்  ஆறு மாதங்களில் அதன் ஜிடிபி -10.6 சதவிகிதம் குறைந்துள்ளது.
 
தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிப்பு மற்றும் மரணங்கள் அடிப்படையில் உலகிலேயே முதல் இடத்தில் இருக்கிறது.
 
அதற்கு அடுத்தபடியாக ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி முறையே -11.9, -17.1, -18.9 ஆகிய  விகிதத்தில் சரிவடைந்துள்ளது என ஓ.இ.சி.டி தரவுகள் காட்டுகின்றன.
 
இந்தியாவைப் போலவே பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு ஐரோப்பிய நாடுகளின் ஜிடிபி 20 சதவிகிதத்தை விட அதிகமாக சரிவடைந்துள்ளது.
 
2019ஆம் ஆண்டின் இறுதியில் இருந்த அளவைவிட பிரிட்டனின் ஜிடிபி -22.1 சதவிகிதமும், ஸ்பெயினின் ஜிடிபி 22.7 சதவிகிதமும் சரிவடைந்துள்ளது.
 
ஏப்ரல் - ஜூன் காலாண்டில் உலக நாடுகள்
 
உலக அளவில் முடக்க நிலை பெரும்பாலான நாடுகளில் அமலில் இருந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ஜி-7 நாடுகளின் பொருளாதார வளர்ச்சி - 10.7 சதவிகிதம் சரிவடைந்துள்ளது என ஓ.இ.சி.டி தரவுகள் காட்டுகின்றன.
 
இவற்றில் அமெரிக்கா - 9.5 சதவீதமும், கனடா - 12 சதவிகிதமும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன.
 
ஐரோப்பிய நாடுகளில் அதிகபட்சமாகப் பிரிட்டனின் ஜிடிபி -24 சதவிகிதம் குறைந்துள்ளது. பிரான்சில் இதுவே - 13.8 சதவிகிதமாகவும், ஜெர்மனியில் - 9.7 சதவிகிதமாகவும், இத்தாலியில் -12.4 சதவிகிதமாகவும் இந்த சரிவு உள்ளது.
 
ஆசிய நாடான ஜப்பான் 2020இந்த இரண்டாம் காலாண்டில் -7.8 சதவீதம் எனும் விகிதத்தில் ஜிடிபி சரிவைச் சந்தித்துள்ளது.

வளரும் சீன பொருளாதாரம்
 
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய சீனாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது நேர்மறையாக உள்ளது.
 
மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட முதல் ஏழு நாடுகளில் (ஜி-7 நாடுகள்), ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நேர்மறையான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட ஒரே நாடாக சீனா உள்ளது.
 
இந்தக் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 3.2% வளர்ச்சி அடைந்துள்ளது.
 
முடக்க நிலைக்கு பின்பு அங்கு மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. சீனாவின் ஜிடிபி எதிர்மறை வளர்ச்சியை தற்போது  எதிர்கொள்ளவில்லை. வேறு சொற்களில் சொல்வதானால், இந்தியா மற்றும் மேற்கண்ட நாடுகளைப் போல சீனாவின் பொருளாதாரம் தேயவில்லை; வளர்ந்தே  வருகிறது.