1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (00:04 IST)

இந்தியா Vs சீனா: தீவிரமாகும் எல்ஏசி பதற்றம் - படைகளை திரும்பப்பெற சீனா நெருக்கடி

இந்தியா - சீனா எல்லை பதற்றம்: லடாக் எல்லையில் மீண்டும் அத்துமீறிய சீன 
இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ மற்றும் வெளியுறவு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவை மீறி, கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் தங்களை தூண்டும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
 
ஆகஸ்டு 29 மற்றும் 30 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், ஏற்கனவே இருக்கும் நிலையை மாற்றும் முயற்சிகளில் சீன ராணுவம் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாங்கோங் த்சோ ஏரியின் வடக்கு கரையோரத்தில் நடந்த சீன ராணுவத்தின் இந்த முயற்சியை இந்தியப்படையினர் முறியடித்ததாகவும், சீன ராணுவம் தன்னிச்சையாக அங்கிருக்கும் சூழலை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டால் அதை தடுக்கும் விதத்தில் தங்களது நிலையை வலிமைப்படுத்தி கொண்டதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
 
பேச்சுவார்த்தை மூலமாக அமைதியை நிலைநாட்ட இந்திய ராணுவம் உறுதி கொண்டுள்ள அதே சூழலில் தங்களது பிராந்தியத்தை காக்கவும் உறுதி ஏற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்காக பிரிகேட் கமாண்டர் மட்டத்திலான கொடி சந்திப்பு எல்லையில் உள்ள சுஷூலில் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், எல்ஏசி பகுதியைக் கடந்து முன்னேறியுள்ள தமது படைத்துருப்புகளை இந்தியா திரும்பப்பெற வேண்டும் என்றும் இந்த நடவடிக்கை ஆட்சேபத்துக்குரியது என்றும் சீன ராணுவத்தின் மேற்குப்படைப்பிரிவு தலைமை இன்று வலியுறுத்தியுள்ளதாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.
 
இந்த நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியாங், கிழக்கு லடாக் பகுதிக்கு அருகே எல்ஏசி நடவடிக்கையை சீன ராணுவம் கண்டிப்புடன் பின்பற்றி வருவதாகவும், அந்த எல்லையை எப்போதும் கடக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், களத்தில் உள்ள அந்த பிரச்னை குறித்து இரு தரப்பும் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் ட்சள லிஜியாங் கூறினார்.
 
இந்தியா - சீனா இடையே 3,500 கி.மீ எல்லை உள்ளது, இரு நாடுகளும் தற்போதைய எல்லையின் நிலையை ஏற்கவில்லை. இந்த இரு நாடுகளுக்கும் இடையே 1962-இல் ஒரு போரும் நடந்துள்ளது.
 
முன்னதாக, ஜூன் 15 அன்று, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாடுகளின் வீரர்கள் கடுமையாக மோதிக் கொண்டார்கள். அதில் 20 இந்திய வீரர்கள் பலியானார்கள். அப்போது முதல் எல்ஏசி பகுதிகளில் பதற்றத்தை குறைக்க இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன, ஆனால் பதற்றங்கள் இன்னும் தணியாமல் இருப்பது இன்றைய சம்பவம் மூலம் உறுதியாகியிருக்கிறது.
 
கடந்த வாரம், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், எல்ஏசி எனப்படும் அசல் கட்டுப்பாட்டு கோடு சம்பவம், சீனாவுடன் 1962ஆம் ஆண்டில் ஏற்பட்ட பதற்றத்துக்கு பிந்தைய மிக மோசமான நிலைமை என்று கூறியிருந்தார்.
 
"இது நிச்சயமாக 1962 க்குப் பிறகு மிக மோசமான நிலைமை. 45 ஆண்டுகளுக்குப் பிறகும், சீனாவுடனான மோதலில் ராணுவ உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எல்லையில் இரு தரப்பிலிருந்தும் துருப்புக்களை அனுப்புவது முன்னெப்போதும் இல்லாதது."
 
எல்லையில் சமாதானத்தை ஏற்படுத்துவது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான சம உறவுகளில்தான் சாத்தியமாகும் என்று இந்தியா சீனாவிடம் கூறியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார்.