தமிழகத்தில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம், வெள்ளி எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் இதுவரை ரூ.105.72 கோடி, 803 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக இதுவரை ரூ.105.72 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ.227.45 கோடி மதிப்புள்ள 803 கிலோ தங்கம், 478 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 5-ந் தேதி மட்டும் கோவையில் 149 கிலோ தங்கம் பிடிபட்டது. தூத்துக்குடியில் ரூ.37 லட்சம், தர்மபுரியில் ரூ.1.5 கோடி பிடிபட்டுள்ளது.
அனுமதி இல்லாமல் சுவர் விளம்பரம் செய்ததாக 3,246 வழக்குகளும், பணம், பரிசு பொருள் வழங்கியதாக 302 வழக்குகளும், தேர்தல் விதிமீறல் குற்றத்துக்காக 291 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் தேர்தல் நடவடிக்கை தொடர்பாக 3,839 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையிலும் வழக்குகள் பதிவாகியுள்ளன" என்று அந்த செய்தியில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளது.