புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (13:44 IST)

வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் கிட் எவ்வாறு வேலை செய்யும்?

கொரோனா தொற்று உள்ளதா என்பதை அறிய இனி நீங்கள் வீட்டிலேயே சுய பரிசோதனை செய்யலாம். வீடுகளில் கொரோனா பரிசோதனை செய்யும் சாதனத்தை சமீபத்தில் புனேவை சேர்ந்த மைலேப் நிறுவனம் உருவாக்கியது. இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நாக்பூரை சேர்ந்த NEERI என்னும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட உப்புத் தண்ணீரை வாயில் கொப்பளித்து கொரோனா பரிசோதனை செய்யும் முறைக்கும் ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளது.

பரிசோதனைகளால் என்ன பயன்?

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றால் `ஸ்வாப் டெஸ்ட்' எனப்படும் மூக்கு மற்றும் தொண்டைகளில் மெல்லிய குச்சியை உள்விட்டு சளி அல்லது எச்சில் மாதிரியை எடுப்பார்கள். இதை பலர் கடினமாக உணருவது உண்டு. பலர் ஒரு முறைக்கும் மேல் இந்த பரிசோதனைக்கு உட்பட்டிருக்கும் சூழலை அனுபவித்திருக்கலாம். தற்போது இந்த பரிசோதனையை அதிகம் பேர் மேற்கொள்வதால் இதற்கான முடிவுகள் வருவதற்கும் நேரம் அதிகம் ஆகிறது. ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கிட்டுகளால் கொரோனா பரிசோதனை எளிமையாகி விடும்.

ஐசிஎம்ஆர் சமீபத்தில் இரு பரிசோதனை முறைகளுக்கு ஒப்புதல் வழங்கியது.

முதல் பரிசோதனை, உப்பு நீரை கொப்புளித்து அதன்மூலம் பரிசோதனை மேற்கொள்ளலாம்.

இரண்டாவது பரிசோதனை, வீட்டிலேயே சுயமாக மூக்கில் ஸ்வாபை விட்டு பரிசோதனை செய்து கொள்ளலாம். இது எந்த அளவிற்கு செயல்படும்? எவ்வளவு துல்லியமாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

ஆர்டிபிசிஆர் பரிசோதனை முறை ஒரு பரவலான முறையாக உள்ளது. ஆனால் இதன் முடிவுகள் வருவதற்கு 24 மணி நேரம் ஆகும், ஆன்டிஜென் பரிசோதனை அரை மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் முடிவுகளை காட்டும். ஆனால் இது அவ்வளவு துல்லியமானதாக இல்லை.

அதேசமயம் ஃபெலுடா போன்ற பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது அதிக வரவேற்பைப் பெறவில்லை.

இத்தகைய சூழலில்தான் ஐசிஎம்ஆர் இரு வேறு பரிசோதனை முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் ஒன்றுதான், தேசிய சுற்றுச்சூழல் பொறியயல் ஆய்வு நிறுவனத்தால் (NEERI) உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உப்பு தண்ணீரை கொப்பளித்து பரிசோதனை செய்யலாம்.

மற்றொன்று, சுயபரிசோதனை சாதன முறை. இது மைலேப் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

உப்புத் தண்ணீர் பரிசோதனைஎவ்வாறு செயல்படும்?

NEERI தனது பரிசோதனைக்கு உப்புத் தண்ணீர் `கொப்புளித்தல் முறை ஆர்டி- பிசிஆர் சோதனை` என்று பெயர் சூட்டியுள்ளது. இதை மக்கள் தங்கள் வீடுகளிலேயே செய்து கொள்ள முடியும். ஆனால் எவ்வாறு?

உங்களுக்கு ஒரு 5 மில்லி லிட்டர் உப்பு நீர் வழங்கப்படும். அதில் நீங்கள் ஒரு 15 நொடிகளுக்கு வாய் கொப்பளிக்க வேண்டும். மேலும் 15 நொடிகளுக்கு நீரை வாயில் முழுக்க வைத்திருக்க வேண்டும். அதன் பின் அந்த நீரை ட்யூபில் துப்ப வேண்டும். அந்த நீர் கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்கள் வாயில் உள்ள நீரில் வைரஸ் வந்து விடும். அதன் மீது ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தினால் வைரஸ் கண்டுபிடிக்கப்படும்.

ஐசிஎம்ஆர் இந்த சோதனை முறைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் NEERI இந்த முறை குறித்து விளக்க உரை ஒன்றை தயார் செய்து, நாட்டில் உள்ள பிற ஆய்வகங்களுக்கும் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனை NEERI-ன் வைரஸ் நிபுணவியல் துறை தலைவர் கிருஷ்ணா கயிர்நார் பிபிசி மராத்தி சேவையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் இந்த நிறுவனத்தால் அந்த கிட்டை தயாரிக்க முடியாது, ஏனென்றால் இது வெறும் ஆய்வு நிறுவனம். இந்த முறையை செயல்படுத்துவதற்கான செயல்முறை (ரோட் மேப்) திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.

இந்த பரிசோதனைக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என நீங்கள் யோசிக்கலாம்…பொதுவாக இந்த வகை பரிசோதனைக்கான முடிவுகள் 3 மணி நேரத்தில் தெரியும்.

ஆனால் ஆய்வகங்கள் கடும் அழுத்தத்தை சந்தித்து வருவதால் இந்த மாதிரிகள் ஆய்வகங்களை அடைய வெகுநேரம் ஆகும்.

இந்த பரிசோதனை முறை ஸ்வாப் பரிசோதனை செய்வதற்கான நேரத்தை குறைக்கிறது. எனவே மாதிரிகள், ஆய்வகங்களை வேகமாக சென்றடைந்து முடிவுகள் விரைவாக அளிக்கப்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த முறையில் அதிக மாதிரிகள் வந்தால் அதை ஆய்வகங்கள் சமாளிக்குமா என்பது நமக்கு தெரியவில்லை.

வீட்டில் ஸ்வாப் டெஸ்ட் எடுப்பது எப்படி?

புனேவை சேர்ந்த மைலேப் நிறுவனம் சுயபரிசோதனை செய்யும் கிட்டை உருவாக்கியுள்ளது. இந்த கிட்டிற்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த கிட் ஆன்டிஜன் பரிசோதனை செய்ய உதவுகிறது. இதன் முடிவு 10-15 நிமிடங்களில் தெரிந்து விடும். இந்த கிட்டின் விலை 250ரூபாய் இது விரைவில் சந்தையில் கிடைக்கும்.

இந்த கிட்டில் ஒரு ஸ்வாபும், நீர் நிறைந்த ட்யூபும் இருக்கும். அந்த ஸ்வாபை எடுத்து இரு மூக்கு துவாரங்களிலும் 2-4 செமீட்டர் அளவுக்கு உள்விட்டு ஐந்து முறை நகர்த்த வேண்டும்.
அதன்பின் அந்த டெஸ்ட் ட்யூபில் நாம் ஸ்வாபை போட்டு லிட்டை மூட வேண்டும். அதன்பிறகு கொடுக்கப்பட்ட நீரை சோதனை செய்து கொள்வதற்காக கொடுக்கப்பட்ட பட்டையில் இரு துளி விட வேண்டும்.

இதன்மூலம் 15 நிமிடங்களில் முடிவுகள் வரும். மேலும் இந்த முடிவு வருவதற்கு 20 நிமிடங்களுக்கு மேல் ஆனால் இந்த பரிசோதனையை நம்பகமானதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த கிட்டின் மூலம் பரிசோதனை செய்பவர்கள் முடிவுகளை CoviSelf செயலியில் சமர்ப்பிக்க வேண்டும்.

ரேபிட் ஆன்டிஜன் சோதனைகள் மூலம் துள்ளியமாக முடிவுகள் கிடைக்கிறதா என பல கேள்விகள் உள்ளன. ஃபால்ஸ் நெகடிவ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்த பரிசோதனை முறை பல இடங்களில் பின்பற்றப்படுகிறது.