பறக்கும் கார்கள்: குறைந்த விலையில் ஓர் அட்டகாச முயற்சி
பறக்கும் கார்கள் கலிபோர்னியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனை இயக்குவதற்கு பைலட் லைசன்ஸ் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற பறக்கும் கார்கள் முன்பே வந்து இருந்தாலும், அவற்றின் விலை மிக அதிகமாக இருக்கும். ஆனால் இந்த புதிய 'ப்ளாக் ஃப்ளை' கார்கள் ஸ்போர்ட்ஸ் யுட்டிலிட்டி வெஹிக்கிள் எனப்படும் எஸ்.யூ.வி மாடல்கள் விலையிலேயே இருக்கும். அதுமட்டுமல்ல, இதனை இயக்குவதற்கு பைலட் லைசன்ஸ் தேவையில்லை.
ஒப்பனர் நிறுவனம் இந்த ப்ளாக் ஃப்ளை காரை வடிவமைத்துள்ளது. இதன் சோதனை ஓட்டம் கனடாவில் நடந்துவிட்டது. அந்த நாட்டின் விமான போக்குவரத்து ஆணையமும் இந்த பறக்கும் காருக்கு அனுமதி கொடுத்துள்ளது.
கூகுளின் இணை நிறுவனர் லாரி பேஜின் பின்புலத்தில் இயங்கும் கிட்டி ஹாக் ஸ்டார்ட் அப் நிறுவனமும் இதுபோன்ற பறக்கும் கார்களின் சோதனை ஒட்டத்தை லாஸ் வேகாஸில் நடத்தி உள்ளது.
உலகெங்கும் பல நிறுவனங்கள் இந்த வகை வாகனத்தில் ஆர்வம் செலுத்திவருகின்றன. ஒருவர் மட்டுமே பயணிக்கும் வடிவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பறக்கும் காரை, புல் தரையிலிருந்து கூட டேக் ஆஃப் செய்து, அது போன்ற நிலத்திலேயே தரையிறக்கலாம்.
இந்த வாகனத்திற்கு பைலட் உரிமம் தேவையில்லை. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதனை ஓட்ட சில பிரத்யேக பயிற்சிகள் எடுக்க வேண்டும். சில தேர்வுகள் எழுத வேண்டும் என்கிறது ஒப்பனர் நிறுவனம்.