தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரி தனி விமானத்தில் சென்றதால் பிரச்சனையா? சட்டமன்றத்தில் கடும் விவாதம்..!
பீகார் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி நிலேஷ் ராமச்சந்திர தியோரே, தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் பயணம் செய்தது தற்போது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 2025-ல் டெல்லியிலிருந்து பாட்னாவிற்கு அவர் சென்ற இந்த பயணம் குறித்து, ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டசபையில் கேள்வி எழுப்பியுள்ளன. அரசு அதிகாரி ஒருவர் இவ்வளவு செலவுமிக்க விமானத்தில் எப்படி பயணிக்க முடியும் என்றும், இதற்கு யார் பணம் கொடுத்தது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கு பதிலளித்த பீகார் அமைச்சர் அசோக் சவுத்ரி, அரசு பணி நிமித்தமாக சென்ற விமானம் மீண்டும் பாட்னா திரும்பியபோது, அதிகாரி தனது குடும்பத்துடன் அதில் பயணித்ததாக விளக்கமளித்தார். ஆனால், இந்த விவகாரம் ஜாதி ரீதியான விவாதமாக மாறியுள்ளது.
நிலேஷ் தியோரே ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எதிர்க்கட்சிகள் அவரை குறிவைக்கின்றனவா என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார். ஆனால், இது ஜாதி பிரச்சினை அல்ல, மக்கள் வரிப்பணம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த பொறுப்புக்கூறல் சார்ந்த கேள்வி என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
முறையான கட்டணம் செலுத்தப்பட்டதா என்பது குறித்த தெளிவான விளக்கம் அரசு தரப்பிலிருந்து இன்னும் கிடைக்கவில்லை.
Edited by Siva