வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2018 (15:38 IST)

“பாகிஸ்தானில் சர்வாதிகாரத்தை சமாளிக்க ஸ்ரீதேவி எப்படி உதவினார்?” - ஒரு ரசிகரின் நினைவுகள்

ஸ்ரீதேவியின் திரைப்படங்களை பார்த்து என் பாகிஸ்தான் கல்லூரி வாழ்க்கையை இனிதாக்கினேன் என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அது ஒரு கனாகாலம். எனக்கு அப்போது கராச்சி பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து இருந்தது. பின் ஓராண்டு காலம் கழித்து எனக்கு அந்த பல்கலைக்கழக விடுதியில் அறை ஒதுக்கப்பட்டது.எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் நேர்த்தியாக பொருட்களை அடுக்கி, முதலில் அதை ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்தேன். பின், நான் செய்த இரண்டாவது காரியம் என்ன தெரியுமா? இரண்டு ஸ்ரீதேவி போஸ்டர்களை வாங்கி சுவர்களில் ஒட்டியது தான்.
 
அப்போது பாகிஸ்தானில், இந்திய திரைப்படங்களை வி.சி.ஆரில் பார்ப்பது தண்டனைக்குரிய ஒரு குற்றம். பிடிப்பட்டால், ஆறு மாதங்களை வரை சிறை தண்டனை கிடைக்கும்.ஆனால், நாங்கள், மாணவர்கள் எப்போதும் அந்த சட்டதிட்டங்களுக்கு செவி சாய்த்ததே இல்லை. மாணவர்களிடமிருந்து பணம் திரட்டி, வி.சி.ஆரில் திரைப்படங்களை வாடகைக்கு எடுத்து பார்ப்போம். அதில் பெரும்பாலும் ஸ்ரீதேவி திரைப்படங்கள்தான் இருக்கும்.
 
ஜியாவின் ஆட்சிக் காலம்
 
`ஜஸ்டீஸ் செளத்ரி`, `ஜானி தோஸ்த்`, `நயா கடம்`, `ஆக் அவுர் ஷோலா`, `இன்குலாப்`, `மிஸ்டர் இந்தியா`, `கர்மா`, `சாந்தினி` நாங்கள் இந்த ஸ்ரீதேவி திரைப்படங்களை, விடுதியின் மைய கட்டடத்தில் அமர்ந்து பார்த்தோம். இந்திய படங்கள் பார்ப்பது அப்போது குற்றச்செயல்தான். ஆனால், நாங்கள் அஞ்சவில்லை. அதிக சத்தம் வைத்து திரைப்படங்களை பார்த்தோம்.
அப்போதுதான் எங்கள் விடுதிக்கு வெளியே நிற்கும் காவல்துறைக்கு சத்தம் கேட்கும். கேட்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமும்.பாகிஸ்தான் ஜெனரல் ஜியா - உல் - ஹக்கின் சர்வாதிகாரத்திற்கு எதிராக நாங்கள் இப்படியாகதான் அப்போது எங்கள் எதிர்ப்பை தெரிவித்தோம்.
 
சில நேரங்களில் காவல்துறையினர் சிரித்துக் கொண்டே சன்னமான குரலில், "உங்களுடைய உணர்வு எனக்கு புரிகிறது. ஆனால், சத்தத்தை கம்மியாக வைத்துக் கொள்ளுங்கள். கோணல் புத்திக் கொண்ட ஏதாவது உயர் அதிகாரி வந்தால் எங்களுக்கு சிக்கல் ஆகும்" என்றார்.
 
போலீஸ்காரரின் விருப்பம்
 
ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் போலீஸார் மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், ஒரு போலீஸ்காரர் இன்னும் என் நினைவில் இருக்கிறார். என் நினைவுகள் சரியாக இருந்தால், அவர் பெயர் ஜமீல். அவர் காவல்துறையில் உள்ள ஒரு சிறப்பு பிரிவை சேர்ந்த அதிகாரி. அதனால் அவர் சீருடை அணிந்து இருக்கமாட்டார். அவர் ஏறத்தாழ ஓராண்டு எங்கள் பல்கலைக்கழக விடுதி அருகே பணியில் இருந்தார்.
 
ஒரு நாள் அவர் எங்களிடம், தாம் வேறு இடத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியபோது, எங்களில் சில மாணவர்கள் அவரை, கல்லூரி விடுதி உணவகத்திற்கு விருந்துக்கு அழைத்தோம்.அவர், விருந்தெல்லாம் இருக்கட்டும். எனக்கு முதலில் ஸ்ரீதேவி திரைப்படத்தை காட்டுங்கள் என்றார். அன்றிரவு, அவருக்கு முழு மரியாதையுடன், `ஜஸ்டீஸ் செளத்திரி` திரைப்படத்தை திரையிட்டோம்.
 
அவர் இல்லாமல் எப்படி கடந்திருப்போம்?
 
ஏறத்தாழ 30 - 35 ஆண்டுகளுக்குப் பின் அனைத்தையும் இப்போது நினைத்து பார்க்கிறேன். ஸ்ரீதேவி இல்லாமல் ஜெனரல் ஜியா தலைமையிலான அந்த சர்வாதிகார நாட்களை கடப்பது எவ்வளவு கடினமானதாக... மாணவர்களாகிய எங்களுக்கு இருந்திருக்கும்?
 
நான் கடைசியாக பார்த்த ஸ்ரீதேவி படம் `சாந்தினி`. ஆனால், அதன்பின் வாழ்க்கை அவரை எங்கெல்லாம் அழைத்து சென்றது என்று தெரியவில்லை.ஸ்ரீதேவி, என்ன நடக்கும் என்பதை அறிந்தே இருந்தார் என நினைக்கிறேன். அதனால்தான், ஒரு மாலை சூரியன் போல, தொண்ணூறுகளில், அவர் மெல்ல திரை உலகை விட்டு விலகினார்.
 
இங்கிலீஷ் - விங்கிலீஷ் திரைப்படம் சிறப்பாக இருந்தது என்று கேள்விப்பட்டேன். அவர் `மாம்` திரைப்படத்தில் சிறப்பாக நடித்து இருந்தார் என்பதையும் அறிந்தேன். தனது சிறந்த படைப்பு என்று ஒரு ஓவியத்தை வான்கோ கருதினால், அதனை அவர் கிழித்து விடுவார் என்று சொல்லப்படுவது உண்டு. அதுதான் இப்போது நிகழ்ந்து இருக்கிறது. படைத்தவன் தனது சிறந்த படைப்பை மீண்டும் எடுத்துக் கொண்டுவிட்டான்.