1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 20 மே 2024 (12:17 IST)

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

Edapadi
தேர்தல் ஆணையம் வெளியிடும் ஓட்டு சதவீதத்தில் குளறுபடியும், சந்தேகமும் உள்ளது என்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்தாக உள்ளது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
 
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் மழைநீரை தேக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பணை கட்டினோம் என்றார். ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்பு எந்த தடுப்பணையும் கட்டவில்லை என்று  அவர் குற்றம் சாட்டினார். சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசின் முயற்சியை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
 
கேரள அரசு தடுப்பணை கட்டினால், அமராவதி ஆற்றுக்கு வரும் நீர் தடுக்கப்பட்டு தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும். கேரளா, கர்நாடகா, ஆந்திர அரசுகள் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுப்பதில் அண்டை மாநிலங்கள் குறியாக இருப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார்.

 
மக்களவை தேர்தலில் தேர்தலில் பல்வேறு இடங்களில் அதிமுகவுக்கு ஓட்டளிப்பவர்களை 'டபுள் என்ட்ரி' எனக்கூறி நீக்கிவிட்டார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்தாக உள்ளது என்றும் தேர்தல் முடிந்தவுடன் தேர்தல் ஆணையம் அறிவித்த ஓட்டுப்பதிவு சதவீதத்தில் குளறுபடியும், சந்தேகமும் உள்ளது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.