1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 டிசம்பர் 2022 (13:02 IST)

பிளவுபட்ட அதிமுக, சர்ச்சை வளையத்தில் பாஜக - சோதனையாகவே வருடத்தை கழிக்கும் அரசியல் தலைமைகள்

ADMK
தற்போது முடிவுக்கு வரவிருக்கும் 2022ஆம் ஆண்டு, மத்தியில் ஆளும் கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தமிழ்நாட்டை இதற்கு முன்பு ஆட்சி செய்த அதிமுகவுக்கும் மிகுந்த சோதனையான ஆண்டாகவே அமைந்து விட்டது. இந்தக் கட்சிகள் என்னென்ன விதத்தில் பின்னடைவுகளைச் சந்தித்தன?

கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தோல்வியடைந்தது, அந்த இரு கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவு என்றாலும் கூட, 2022ஆம் ஆண்டில் நடந்த பல நிகழ்வுகள், அதிமுகவையும் பாஜகவையும் மிகவும் பலவீனமாக காட்சியளிக்கச் செய்தன. ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், இந்த வருட துவக்கத்தில் அதாவது பிப்ரவரி மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்தியது தமிழ்நாடு அரசு. பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன.

இந்தத் தேர்தல்களில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய மூன்று மட்டங்களிலும் தி.மு.க பெரும் வெற்றியைப் பெற, அ.தி.மு.கவும் பாஜகவும் படுதோல்வியடைந்தன. குறிப்பாக அதிமுகவின் வாக்கு சுமார் 25 சதவீதம் என்ற அளவுக்குக் குறைந்தது. பாஜகவும் இந்தத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த தேர்தல் தோல்வி தந்த பின்னடைவிலிருந்து அதிமுக வீழ்வதற்கு முன்பாக, அந்த கட்சிக்குள்ளேயே முரண்பாடுகள் ஏற்பட ஆரம்பித்தன.

முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, கட்சியின் ஒரே தலைமையாக மாற நினைத்தார். ஆனால், இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் தரப்பு விரும்பியது.

பிளவுக்கு தயாரான தலைமைகள்

நீறுபூத்த நெருப்பாக கட்சிக்குள்ளேயே நிலவிய முரண்பாடு, ஜூன் மாத வாக்கில் மெல்லமெல்ல வெளியில் வர ஆரம்பித்தது.

இதன் துவக்கப்புள்ளி, சென்னையில் ஜூன் 23ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த அ.தி.மு.கவின் பொதுக் குழுதான். அ.தி.மு.கவின் வழக்கமான பொதுக் குழுவாக அறிவிக்கப்பட்டாலும், எடப்பாடி கே. பழனிச்சாமியை ஒரே தலைவராக முன்னிறுத்தும் நோக்கம் அந்த அறிவிப்புக்குப் பின்னணியில் இருந்தது. இந்த நிலையில், ஜூன் 16ஆம் தேதி அ.தி.மு.க. நிர்வாகிகளின் கூட்டம் அ.தி.மு.க. தலைமையகத்தில் கூட்டப்பட்டபோது, மோதல் வெடித்தது. அங்கு கூடியிருந்த தொண்டர்கள், ஒற்றைத் தலைமை இ.பி.எஸ். எனக் கோஷமிட, பிறகு வந்த ஓ.பி.எஸ்சின் ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை ஓ.பி.எஸ். எனக் கோஷமிட்டனர். இருந்தாலும், கட்சி ஒற்றுமையாக இருப்பதாக நிர்வாகிகள் பேட்டியளித்தனர். ஆனால், பிளவு இருப்பது அந்தத் தருணத்தில் வெளிப்படையாகிவிட்டது.

மாநிலம் முழுவதும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் இ.பி.எஸ். ஆதரவாளர்களும் தனித்தனியாக போஸ்டர்களை ஒட்டத் துவங்கினர். இதுதான் துவக்கம். இந்தப் புள்ளியிலிருந்துதான் துவங்கியது அக்கட்சியின் பின்னடைவு. இதற்குப் பிறகு, பொதுக் குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், அந்தப் பொதுக் குழுவில் வெளிப்படையாகவே ஓ. பன்னீர்செல்வத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு அவர் வெளியேறினார். இதற்குப் பிறகு, இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொள்ள, கட்சி இரண்டு பிரிவுகளாக செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

தற்போது இது தொடர்பான ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் இரு தரப்புமே சோர்வாகக் காட்சியளிக்கின்றன. அந்த வழக்கில் விசாரணையே இன்னும் முடிவடையாத நிலையில், கட்சியின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தி.மு.க. அரசை இருதரப்பும் தனித்தனியே விமர்சனம் செய்தாலும், அந்த விமர்சனங்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஓ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அறிக்கையோடு நிறுத்திக்கொள்ளும் நிலையில், அவ்வப்போது மாநிலம் தழுவிய போராட்டங்களை அறிவிக்கிறது இ.பி.எஸ். தரப்பு. ஆனால், அது போதுமானதாக இல்லை. இதன் காரணமாக, கூட்டணிக் கட்சியாக இருந்த (இருக்கும்?) பா.ஜ.க. தானே எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொள்ளும் நிலைக்கு, அ.தி.மு.க. தற்போது தள்ளப்பட்டிருக்கிறது.

விரைவிலேயே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் நிலையில், எந்தத் தரப்புக்கு வெற்றி கிடைத்தாலும் அந்தத் தரப்பு தன்னை வலுப்படுத்திக்கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம் எனக் கருதுகிறது.

பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை, அண்ணாமலை மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, விறுவிறுப்பாகவே காட்சியளிக்கிறது. பெரும்பாலும் தினசரி செய்தியாளர் சந்திப்புகள், கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் கட்சி நிர்வாகிகளை மட்டுமல்லாமல், ஊடகங்களையும் பரபரப்பாகவே வைத்திருக்கிறார் அவர்.

தி.மு.க. எதிர்ப்பில் தீவிரமாக இருக்கும் அவர், அரசுக்கு எதிராக மாதம் ஒரு விவகாரத்தையாவது மாநில அளவில் விவாதிக்கவைப்பதில் தீவிரம் காட்டுகிறார். மாநிலத்தில் அரசுக்கு எதிராக அண்ணாமலை எழுப்பும் குரல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன என்றாலும், பல பிரச்னைகளில் மதம் சார்ந்த நிலைப்பாடுகளை எடுப்பது கடுமையான விமர்சனங்களுக்கும் வழிவகுத்திருக்கிறது.

குறிப்பாக, அரியலூரைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், மரணமடைந்த விவகாரத்தில் அந்த மாணவி கிறிஸ்தவ மதத்திற்கு மாற வலியுறுத்தப்பட்டதால் இறந்தார் என பா.ஜ.கவும் இந்து அமைப்புகளும் கூறியதும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இதையெல்லாம் தாண்டி, கட்சியைத் தொடர்ந்து ஊடகங்களில் பேசுபொருளாகவே வைத்திருக்கிறார் அண்ணாமலை.

சங்கடம் கொடுத்த நிகழ்வுகள்

இருந்தபோதும், பா.ஜ.கவின் கட்சிக்குள் இருக்கும் பிரச்னைகள் தொடர்ந்து அக்கட்சியை பின்னுக்கு இழுத்து வருகின்றன. கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே, அக்கட்சியின் மூத்த மாநிலத் தலைவர்களில் ஒருவரான. கே.டி. ராகவனின் ஆபாச வீடியோ வெளியாகி, கட்சிக்குப் பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டது.

இதையடுத்து கட்சிக்குள் பாலியல் விவகாரங்கள் குறித்து விசாரிக்க பா.ஜ.கவின் மாநிலச் செயலர் மலர்க்கொடி தலைமையில் விசாரணை குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இது போன்ற குழு ஒன்று, தமிழ்நாட்டில் அரசியல் கட்சி ஒன்றுக்குள் அமைக்கப்பட்டது அதுவே முதல்முறை. இதிலிருந்து கட்சி மீண்டுவந்த நிலையில், கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகத்திற்கும் அண்ணாமலைக்கும் இடையில் மோதல், காயத்ரி ரகுராமின் அதிருப்திக் குரல், திருச்சி சூர்யா சிவா, டெய்சி என்பவரை தொலைபேசியில் ஆபாசமாகப் பேசிய விவகாரம், காயத்ரி ரகுராம் பொறுப்பிலிருந்து நீக்கம், சூர்யா சிவா ராஜினாமா என கடந்த சில வாரங்களாக சர்ச்சைக்குரிய விவகாரங்களுக்காகவே கட்சி செய்திகளில் அடிபட்டுவருகிறது. இதற்கிடையில், சில வாரங்களுக்கு முன்பாக நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியின் நிர்வாகிகளைக் கடுமையாக பேசிய விவகாரமும் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, அக்கட்சி ஆட்சியை இழந்திருந்தாலும் இரண்டாகப் பிளவுபட்டிருந்தாலும் பெரிய அளவில் தொண்டர்களையும் அடிமட்ட அளவில் தீவிரமாக செயல்படக்கூடிய நிர்வாகிகளையும் கொண்ட கட்சி. அ.தி.மு.கவின் இடத்தை நிரப்ப நினைக்கும் பா.ஜ.கவுக்கு அந்த அளவுக்கு அடிமட்ட நிர்வாகிகளோ, பூத் ஏஜென்ட்களோ கிடையாது. இருந்தபோதும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணி அமைத்தாலும் தனது கையே ஓங்கியிருக்க வேண்டுமென அண்ணாமலை கருதுவதாகத் தெரிகிறது.

இதைப் புரிந்து கொண்டிருக்கும் அதிமுக, உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்காகக் காத்திருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலிலேயே பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்காவிட்டால், கூடுதல் இடங்களைப் பிடித்திருக்கலாம் எனக் கருதும் அந்தக் கட்சி, நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி குறித்து எடுக்கவிருக்கும் முடிவு, நீண்ட காலத்திற்கு இந்த இரு கட்சிகளின் எதிர்காலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.