செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : திங்கள், 2 டிசம்பர் 2019 (14:51 IST)

கோவை மேட்டுப்பாளையம்: சுற்றுச்சுவர் விழுந்து 4 வீடுகள் நொறுங்கின - 17 பேர் பலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில், மிக உயரமாக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் அருகில் இருந்த நான்கு ஓட்டு வீடுகள் நொறுங்கின. இதில் அந்த நான்கு வீடுகளில் வசித்து வந்த எளிய தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் பலியாகியுள்ளனர்.
மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் அமைந்துள்ள நடூர் கிராமத்தில் உள்ள ஏ.டி. காலனி என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
 
இந்தப் பகுதியில் கூலித் தொழிலாளர் குடும்பங்கள் குடியிருக்கின்றன. சுமார் 50 வீடுகள் இந்தப் பகுதியில் உள்ளன.
 
தற்போது நொறுங்கி விழுந்த நான்கு வீடுகளும் ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த, ஹாலோ பிளாக் கல்லில் கட்டப்பட்ட எளிய வீடுகள் என்கிறார் சம்பவ இடத்தில் இருக்கும் செய்தியாளர் ஹரிஹரன். வரிசையாக அமைந்திருந்த இந்த நான்கு வீடுகளுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு ஆடம்பர வீட்டின் சுற்றுச்சுவர் சுமார் 25 அடி உயரத்துக்கு, கருங்கல்லைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
கட்டும்போதே தற்போது பாதிக்கப்பட்ட வீட்டைச் சேர்ந்தவர்களும், அந்தப் பகுதி மக்களும் இவ்வளவு உயரமான சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அது இடிந்து விழலாம் என்று அச்சமும் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் சொல்வதாகக் கூறுகிறார் ஹரிஹரன்.
 
கடந்த ஒரு வாரமாக நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
 
அரசாங்கம் விமர்சனத்தை கேட்க விரும்பவில்லை: தொழிலதிபர் கிரண் ஷா குற்றச்சாட்டு
உள்ளாட்சி தேர்தல் நகர்ப்புறப் பகுதிகளுக்கு நடத்தப்படாதது ஏன்?: திமுக கண்டனம்
நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் பகுதிகளில் கனமழை பெய்தது. மேட்டுப்பாளையத்தில் 180.33 மி.மீ, அன்னூர் பகுதியில் 36 மி.மீ அளவிற்கு மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சாலைகள் துண்டிக்கப்பட்டன.
 
நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக இந்த நீளமான, உயரமான சுற்றுச்சுவர், அப்பகுதி மக்கள் அஞ்சியபடியே இடிந்து, பக்கத்தில் இருந்த நான்கு வீடுகளின் மீது விழுந்துள்ளது.
 
அதில் இந்த வீடுகள் நொறுங்கி அழுந்தின. உடனடியாக மீட்புக் குழுவினர் அங்கு வந்து மண் வாரி இயந்திரம் கொண்டு இடிபாடுகளை அகற்றி 17 பேரை, அல்லது உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்போது அந்த 17 பேரும் உயிரிழந்துள்ளனர்.
 
இந்த நான்கு வீடுகள் மீது இடிந்து விழுந்த அந்த சுற்றுச்சுவர், இடையில் தூண்களோ, செங்கல்லோ கொண்டு முறைப்படியாகவும் கட்டப்படாமல், வெறும் கருங்கல்லைக் கொண்டு கட்டப்பட்டதுதான் இந்த விபத்துக்கு காரணம் என்று அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
 
இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.