1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (08:24 IST)

அய்யய்யோ இந்த பணமெல்லாம் செல்லாதா ? – பாட்டிகளின் புலம்பல் !

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு மூதாட்டிகள் பணமதிப்பிழப்பு பற்றித் தெரியாமல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை இன்னும் சேமித்து வைத்திருந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பூமலூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டிகள் தங்கம்மாள் (78), ரங்கம்மாள் (75). என்ற இருவரும் சகோதரிகள் ஆவர். கணவன்களை இழந்துவிட்ட இந்த மூதாட்டிகள், மகன்களோடு வசித்து வருகின்றனர். இந்த வயதிலும் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடாமல் வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சைக்காக இவர்களிடம் பணம் ஏதாவது இருக்கிறதா என மகன்கள் கேட்க தங்கள் சேமிப்புக் காசை அவர்கள் கொடுத்துள்ளார்கள். அதைப்பார்த்த பாட்டிகளின் மகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவை எல்லாம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது தெரியாமல் அந்த நோட்டுகளை  மாற்றாமல் அப்படியே வைத்திருந்துள்ளனர்.

இந்த பழைய நோட்டுகளாக ரங்கம்மாளிடம் ரூ.24 ஆயிரமும், தங்கம்மாளிடம் ரூ.22 ஆயிரமும் இருந்துள்ளது. இவற்றை இப்போது மாற்ற முடியாது என சொன்னதைக் கேட்டு இருவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். கஷ்டப்பட்டு உழைத்த காசு இப்படியே செல்லாமல் போயிற்றே எனப் புலம்பி வருகின்ற்னர். இதை மாற்ற மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டுமென பாட்டியின் மகன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.