1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 25 நவம்பர் 2024 (16:09 IST)

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

Anbumani Stalin
ராமதாசுக்கு வேலை இல்லை, அதனால் அவர் தினந்தோறும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அவரது அறிக்கைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார், இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது:

முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த அளவுக்கு பதற்றம் அடைந்திருக்க தேவையில்லை. ராமதாஸ் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக அவர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். ராமதாசுக்கு வேலையில்லை என்று கூறியது ஸ்டாலினின் அதிகாரம் மற்றும் அகம்பாவத்தையே காட்டுகிறது.

அதானி  ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உள்ள பங்கு மற்றும் அதானி உடனான ரகசிய சந்திப்பு குறித்தும் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

முன்னதாக, ஸ்டாலின் - அதானி சந்திப்பு குறித்து ராமதாஸ் கூறியதாவது:

கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாகச் சந்தித்து பேசியிருக்கிறார். இந்த ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன?.

அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து  தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் - அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva