வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : வியாழன், 28 நவம்பர் 2019 (13:07 IST)

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்யுமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
"கடலோர, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் கனமழையும் மிக கனமழையும் பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்" என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்திருக்கிறார்.
 
சென்னை நகரில் நேற்று இரவிலிருந்து விட்டு விட்டு மழை பெய்ததது. இதனால் நகரின் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. சென்னையை ஒட்டியுள்ள தாம்பரம் பகுதியில் இரவு முழுவதும் கன மழை பெய்தது.
 
இந்த மழையின் காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமையன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை தாம்பரத்தில் 15 சென்டி மீட்டர் மழையும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 10 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
 
அடுத்த 24 மணி நேரத்திற்கு இலங்கையின் தெற்குக் கடல் பகுதியில் சுழற்காற்று வீசவாய்ப்புள்ளதால், மீனவர்கள் அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.
 
தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவமழைக் காலம் உச்ச நிலையில் இருக்கும்போதும் குறிப்பிடத்தக்க அளவில் மழை இதுவரை பெய்யவில்லை. இந்த காலகட்டத்தில் சென்னையில் பெய்திருக்க வேண்டிய 59 சென்டி மீட்டர் மழைக்குப் பதிலாக, 39 சென்டி மீட்டர் மழையே பெய்துள்ளது.
 
புதுச்சேரியில் பெய்திருக்க வேண்டிய 65 சென்டிமீட்டர் மழைக்குக்குப் பதிலாக, 42 சென்டிமீட்டர் மழையே பெய்துள்ளது.